பக்கம்:தமிழ் அங்காடி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170  தமிழ் அங்காடி



தான் பெற்ற குழந்தைகளிடமே பராமுகமாயிருக்கும் கமலநாதன் கிழவனிடமும் மணியனிடமும் எங்கே பரிவு காட்டப் போகிறார்? விரட்டினாலும் விரட்டலாம். பாவம்! கமலநாதன் வருவதற்குள் பர்வதம் அம்மாளாவது ஏதாவது பிச்சை போட்டு அனுப்பி விடக்கூடாதா? இந்தக் கிழவன் வாய் திறந்து பிச்சை கேட்காமல் ஏன் பேசாமல் நிற்கவேண்டும்? தானாகக் கொண்டு வந்து போடட்டும் என்றிருக்க இவன் என்ன பட்டினத்தாரா? ஒருவேளை, வாய்திறந்து கேட்டால் வழக்கமாக நடப்பது போல் 'இல்லை போ’ என்று விரட்டி விடலாம். பேசாமல் கூச்சத்துடன் நின்றால், அவர்களாக இரக்கப்பட்டு ஏதாவது கொண்டுவந்து போட்டாலும் போடலாம் என்று புது மனோதத்துவம் ஏதேனும் கிழவன் கண்டுபிடித் திருக்கிறானா? என்றெல்லாம் நான் எண்ணிக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாகப் பர்வதம் அம்மாள் வெளியே வந்தாள். கிழவனையும் பையனையும் பார்த்து விட்டு உள்ளே போனாள். ஏதேனும் பிச்சை கிடைக்கலாம்.

இந்த நேரம் பார்த்துக் கமலநாதன் வீட்டுக்கு வந்தார். சிவபூசையில் கரடி விடுவது போல் இவர் வந்துவிட்டாரே என்று எண்ணினேன். ஆனால் நான் எதிர்பார்த்தாற்போல் நடக்கவில்லை. அவரைப் பார்த்ததும் கிழவனும் மணியனும் மழை கண்ட பயிர்போல் குளிர்ந்து காணப்பட்டார்கள். கமலநாதன் வீட்டிற்குள் நுழையாமலேயே, சட்டைப் பைக்குள் கையை விட்டு எவ்வளவோ காசு எடுத்துக் கிழவன் கையில் கொடுத்தார். அடுத்த கணமே கிழவனும் பையனும் அவ்விடத்தினின்றும் மறைந்தனர்.

கமலநாதன் கடுமையானவர் என்று எப்படியோ என் மனத்தில் ஏற்பட்ட தவறான பதிவை இப்போது அழித்து விட்டேன். கிழவன் வாய் திறந்து கேட்காதிருக்கவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/172&oldid=1204276" இலிருந்து மீள்விக்கப்பட்டது