பக்கம்:தமிழ் அங்காடி.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


176 தமிழ் அங்காடி

பழமொழியே போல, கமலநாதன் விரட்ட விரட்ட அவரை விடாது தொடர்ந்து காசு வாங்கி வரும் கிழவன், நான் கொடுப்பதை மட்டும் ஏற்காது மறுப்பானேன்? பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பது போல, பாத்திரம் அறிந்து பிச்சை எடு’ என்றும் ஏதாவது பழமொழி இருக்கிறதோ? கொட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் கொட்டுப் படவேண்டும் என்பது கிழவனது எண்ணமா? அப்படியென்றால், கொடுப்பதற்குரிய தகுதி நமக்கு இல்லையோ என்று கருதி என்னை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டேன். என்னைப் பார்க்க எனக்கே நாணமாயிருந்தது. கற்புடைய ஒரு பெண்ணை ஒருவன் வேறு விதமாகக் கருதி அவளிடம் தவறாக நடக்க முயன்ற போது, அவள் சீறி அவனது பொல்லாத்தனத்தைக் கண்டித்து இழித்துப் பேசிவிட்டால் அவன் அடையக் கூடிய மானக் குறைவையும் மன வேதனையையும் மிஞ்சியது என் நிலைமை.

கோபித்துக் கொள்ளாதே தாத்தா! கமலநாதன் இன்றைக்கு அலுவலகம் வரவில்லையாதலால் நாமாவது உதவி செய்யலாம் என்று காசு கொடுக்க முன் வந்தேன். அடிக்கடி அவரிடம் காசு வாங்கும்போது என்னிடம் மட்டும் ஏன் வாங்கக்கூடாது?’ என்று நான் கிழவனைக் கேட்டேன். பேச்சு தொடர்ந்தது:

“என் மகனிடம் காசு வாங்கினால் உன்னிடமும் வாங்கி விடுவேனா?”

“என்ன! கமலநாதன் உன் மகனா?’’

“ஆமாம்”

‘வளர்ப்பு மகனா? அல்லது அண்ணன் மகன்-தம்பி மகன்.இப்படி ஏதாவது முறையா?”

‘இல்லையில்லை. என் சொந்த மகனேதான்”.