பக்கம்:தமிழ் அங்காடி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  183


ஒரு முறை திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, மா சம்பத்து கிடைக்கிறது என்று கூறினாராம். இந்த மா சம்பத்து என்பதை மாசம் பத்து உரூபா கிடைக்கிறது என்ற பொருளில் பிறகு பிரித்துக் காட்டினாராம். இதைச் சிலம் குறிப்பிட்டு, எங்கட்கும் இதே நிலைதான் என்று கூறினார். இப்போது அந்தப் பள்ளியில் நிரம்ப ஊதியம் தரடபடுகிறது.

இவ்வாறு இன்னும் எவ்வளவோ கூறலாம். இனி, சிவத்தால் யான் பெற்ற சிறப்புக் கொடை பற்றிச் சில கூறுவேன்:

புதுச்சேரி - முரட்டாண்டிப் பகுதியை அடுத்து இடையன் சாவடி என்னும் சிற்றுார் ஒன்றுள்ளது. அவ்வூரில் நாதமுனி என்னும் பெரியார் ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று மகள்கள் உண்டு. இரண்டாம் மகள் திருமணத்தைத் தமிழ்த் திருமணமாக நடத்த விரும்பினார். ஆனால், மாப்பிள்ளை வீட்டார் இறுதி வரையிலும் அதற்கு ஒத்துக் கொள்ளவே யில்லை.

எனவே, நாதமுனி பெண்ணைத் திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி விட்டு, அத் திருமணத்தில் தாம் கலந்து கொள்ளாமலேயே இருந்தார். திருமணம் முடிந்ததும் மணமக்களைத் தம் வீட்டிற்கு அழைத்து வந்து இங்கே ஒரு தமிழ்த் திருமணம் போன்ற நிகழ்ச்சி நடத்த வேண்டுமென விரும்பி, அந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி நடத்த ஒருவர் தேவை என வேண்டிச் சிவத்தின் உதவியை நாடினார். அப்போது தமக்குச் சிறிது உடல் நலம் குன்றியிருந்ததால் சிவம் அவரை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்தார். அந் நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்கும்படி யான் வேண்டப் பெற்றேன். இது 1948 ஆம் ஆண்டாக இருக்கலாம் - சரியாக நினைவு இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/185&oldid=1204308" இலிருந்து மீள்விக்கப்பட்டது