பக்கம்:தமிழ் அங்காடி.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


184 தமிழ் அங்காடி

பெரியவர் நாதமுனி பின்வருமாறு கூறினார்: நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்துவிட்டு உடனே புறப்பட்டு விடக்கூடாது; எனது சிறு குடிசையில் தங்கி உணவு கொண்டே செல்ல வேண்டும் என்றார். எல்லாவற்றிற்கும் நான் ஒத்துக்கொண்டேன்.

நிகழ்ச்சி நாளன்று காலை நான் இடையன் சாவடி சென்றேன். மணமக்கள் சிற்றுந்தில் (காரில்) வலமாக ஊர்த் தெருக்களைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். வண்டி வீட்டு வாயிலில் வந்து நின்றது. கூட்டம் பெரிதா யிருந்தது கூட்டத்தின் நடுவில் நின்றிருந்த நான் வீட்டை அண்ணாந்து பார்த்தேன். மாடிவீடு - மேல் மாடியும் இருந்தது. அப்போது பின்னால் இருந்து ஒரு குரல் வந்தது:

‘குடிசை என்று சொன்னாரே - இது மாடி வீடா யிருக்கிறதே என்று ஏமாந்து விட்டீர்களா?” என்று என் பின்னால் இருந்த நாதமுனி கூறினார். நான் திரும்பிப் பார்த்துச் சிரித்துக் கொண்டேன்.

யான் நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றியபோது இதைக் குறிப்பிட்டேன். குடிசை என்று சொன்னதால் நான் ஏமாந்து விட்டதாக ஐயா கூறினார். நான் ஏமாற வில்லை. குடி-செய் என்னும் சொற்கள் இணைந்து பேச்சு வழக்கில் குடிசை என்று ஆயிற்று. குடிசை என்பது மண் வீட்டையோ - மாடி வீட்டையோ குறிப்பதில்லை. செய்’ என்றால் நிலம் என்று பொருளாம். குடி செய் என்றால், குடியிருக்கும் நிலப்பகுதி - குடியிருக்கும் இடம் என்பது பொருள். நன் செய் - புன் செய் என்பவற்றில், செய்’ என்பது பேச்சு வழக்கில் சை’ என மருவி நஞ்சைபுஞ்சை எனப் பெயர் வழங்கப்படுதல்போல, குடி செய் என்பதிலும் செய் என்பது சை’ என மருவக் குடிசை என்பது உருவாயிற்று. குடில் என்பதும் இது போன்றதே.