பக்கம்:தமிழ் அங்காடி.pdf/191

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தர சண்முகனார் 189

மிகவும் அடுத்துள்ள வேங்கடநகர் என்னும் குடியிருப்பில் (காலனியில்) குடியிருக்கிறேன். புதுவைச் சிவமும் இந்தக் குடியிருப்பிலேயே இறுதிக் காலத்தில் வாழ்ந்து வந்தார்.

நான் மாலையில் உலாத்தலாகக் கடைத்தெருப் பக்கம் போய் வருவதற்காகச் சில நாட்களில் புறப்படுவதுண்டு. யான் சிவம் வீட்டுப் பக்கமாகத்தான் செல்ல வேண்டும். சிவமும் உலாத்துவதற்காக மாலையில் புறப்படுவதுண்டு. இருவரும் தற்செயலாகப் பல நாட்களில் சேர்ந்துகொண்டு சென்றுள்ளோம். இருவரும் பேசிக்கொண்டு செல்வது, இருவருக்கும் உள்ள தலை சுற்றல் - மயக்கத்தைப் பற்றித்தான், மயக்கமாயிருக்கிறது - மயக்கமாயிருக்கிறது என்று அவர் சொல்லுவார். எனது நிலையும் எப்போதும் அதுவே.

வாழ்க்கை ஒரு புகைவண்டிப் பயணம் போன்றது. புதுவைச் சிவம், நீண்ட தொலைவு பயணம் செய்து, நமக்கு முன்பே, ஒரு நிலையத்தில் இறங்கிவிட்டார். அவ்வளவு தான். அவரது ஆருயிர் அமைதி பெறுக.

16. மாணிக்கச் செம்மல்

பல்வேறு நிறுவனங்கள் வாயிலாகவும், தமது சொந்தப் பொறுப்பிலும் தமிழ் வளர்த்த டாக்டர் வ.சுப. மாணிக்கம் அவர்களைப் பற்றிய சிறு வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரையாகும் இது. இப்பெரியார் வ.சுப. மா எனவும், ஆங்கிலத்தில் VSP எனவும் சுருக்கமாகப் பெயர் வழங்கப் பெற்றார்.

1942ஆம் ஆண்டு கோடை விடுமுறைக் காலத்தில், புதுச்சேரியில் உள்ள கல்விக் கழகம் என்னும் நிறுவனத்தில் முதல் முதலாக நான் இவரைக் கண்டேன்.