பக்கம்:தமிழ் அங்காடி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  197


தில்லை. 'தமிழ்க் காதல்’ என்னும் நூலில் தமிழுக்கே உரித்தான அகப்பொருள் இலக்கணமும் அகப்பொருள் இலக்கியங்களும் நடமிடுகின்றன. வள்ளுவம் என்னும் நூல், வள்ளுவரை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. கம்பர் என்னும் ஆய்வுநூல் இராம கதையின் தேன் பிழிவாக இனிக்கின்றது. இவ்வாறு ஐயாவின் நூல்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டு போவதென்றால் அதற்கு அளவே இராது.

மாணிக்கக் குறள்

ஐயா இயற்றிய 'மாணிக்கக் குறள்' என்னும் நூல் பற்றிச் சிறிது விரிவாக நோக்கி இந்தத் தலைப்பை முடித்துக் கொள்ளலாம்.

மாணிக்கம்போல் சிறப்புடைய குறள் என இதற்குப் பொருள் பண்ணலாம். எந்த மாணிக்கம் போல் எனில், ஆசிரிய மாணிக்கம் என்றும் கொள்ளலாம் - அல்லது - ஒன்பான் மணிகளுள் ஒன்றான மாணிக்கம் என்றும் கொள்ளலாம். ஐந்நூற்றாறு (506) குறள் பாக்களைக் கொண்ட இந்நூல் அந்தாதித் தொடையாய் அமைந்து அணி செய்கிறது. நூலின் பெரும்பாலான இடத்தைத் தமிழியக்கம் எடுத்துக்கொண்டது. மீதி இடம் மன்பதைச் (சமுதாயச்) சீர்திருத்தத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழியக்கம்

        “தமிழிற் சிறந்ததோர் தாய்மொழி யில்லை
        இமிழ்கடல் ஞாலத் தெமக்கு”

என முதல் குறளே தமிழில் தொடங்குகிறது. தமிழ் தமிழர்க்கு மட்டும் தாய் மொழியில்லை - எல்லா மொழியினர்க்கும் பழம் பெருந் தாய் தமிழ் என அடுத்த குறள் கூறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/199&oldid=1204343" இலிருந்து மீள்விக்கப்பட்டது