பக்கம்:தமிழ் அங்காடி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200  தமிழ் அங்காடி


கூறுகின்றனர். புலவர் குழுவிலுள்ள, அனைவரும் ஒத்துக் கொண்டார்களோ-இல்லையோ! அதன் தலைவரா யிருந்த வ.சுப.மா. ஒத்துக் கொள்ளவே இல்லை. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவைதானா? என்பதாக ஒரு தலைப்பு இட்டு ஓர் அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில், தேவையில்லை என்பதைப் பல சான்றுகளுடன் திறம்பட விளக்கியுள்ளார்.

எழுத்துச் சீர்திருத்தத்தை வற்புறுத்துபவர்களுள் முதன்மையானவர்கள், மொ ழி யி ய ல் என்னும் இன்றியமையாமை இல்லாத - இறக்குமதிச் சுமையைச் சுமந்து கொண்டிருக்கும் சிலரே யாவர். வ.சுப.மா. ஐயாவுக்கு மொழியியல் தெரியாது என்று குறை கூறியவர்களும் உளர். மொழியியல் கல்லாதார் தமிழ் வளர்க்க முடியாதா?

மொழியியல் - கல்வி என்பது ஒரு புது மொழியைக் கற்பது போன்றதே. எண்ணற்ற புதிய ஆங்கிலச் சொற்களையும், அவற்றிற்கு இணையெனப் புனைவு செய்துள்ள தமிழ்ச் சொற்களையும் கற்கவேண்டும். கற்று எழுத்துகளைப் பற்றியும் சொற்களைப் பற்றியும் மென்று கொண்டிருக்கவேண்டும். ஐ, ஒள எழுத்துகட்குக் கல்லறை கட்டுப்பட்டுள்ளது. உள்ளே தள்ள முடியாதவாறு எம்மனோர் தடுத்துக் கொண்டுள்ளனர். இருக்கும் இலக்கண நூல்களில் பல மாற்றங்கள் செய்யத் துடிப்பவர்க்கு, மொழி சிதைந்து புதுமொழிபோல் - வேறு மொழிபோல் ஆய்விடுமே என்ற கவலை கிடையாது. மொழியியலார் ஒருவர், காதுசெவி என்னும் இரு சொற்களும் ஒரே வேர்ச் சொல்லிலிருந்து வந்தவை - அந்த வேர்ச் சொல்லைத் தேடி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன் என்றார். இதைக் கேட்டதும், எனக்கு உள்ளுக்குள் இரக்கச் சிரிப்பு ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/202&oldid=1203088" இலிருந்து மீள்விக்கப்பட்டது