பக்கம்:தமிழ் அங்காடி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  205


தோன்றியிருக்கவே முடியாது என்பது வெளிப்படை. ஆதலின், இயந்திரத் தொழிலுக்கு மூலகாரணமாயும் வழிகாட்டியாயும் இருக்கும் பழைய கைத்தொழில் முறைகள் நாட்டில் அழியாமல் மேன்மேலும் பெருகினால்தான், அந்த மாதிரியைப் பார்த்துக் கொண்டே, இயந்திரத் தொழிலும் ஆதாயத்துடன் முன்னேற முடியும். மரம் விழுந்து விட்டாலும் மறுபடியும் விதையைக் கொண்டு மரத்தை உற்பத்தி செய்வது போல, அறிவற்ற இயந்திரங்கள் அழிந்தொழிந்தாலும் அறிவுள்ள மனிதனுடைய கைத் தொழில்கள் இருந்தால்தானே மறுபடியும் அவை தலையெடுக்க முடியும்?

6. இன்னும், பெரும்பயன் அளிக்கத்தக்க பெரிய காரணம் ஒன்றுமுண்டு. நம்நாட்டில் நோயாளிகள்கைகால் கண் குறைந்தவர்களேயன்றி, உடல் நலமுடைய சிலரும் வேலை கிடைக்காமையால் பிச்சையெடுக்கின்றனர். இவர்கட்குத் தக்க கைத்தொழில் தந்து வேலைவாங்கினால் இவர்களின் பசிப்பிணியும், பிச்சையெடுக்கும் இழிவும், பிச்சையிடுபவரின் சுமையும் நீங்குவதோடு, நாட்டின் பொருளாதாரமும் புகழும் முறையே ஓங்குமன்றோ? அத்தகைய குடிசைக் கைத்தொழில்களுள் நூல் நூற்றலையும் கைநெசவையும் சேர்ப்பதில் என்ன தவறு? அவர்களின் உடைக்காவது ஈடுசெய்ய முடியுமல்லவா?

ஓய்வு நேரம்:

இவர்கள் மட்டுமா? மற்றைய தொழிலாளரும் கூட, ஓய்வு நேரத்தில் பேசிக்கொண்டே - பாடிக்கொண்டே நூல் நூற்கலாம். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வீண்வம்பு பேசிக்கொண்டிருக்கும் மங்கையரும் அவற்றைப் பேசிக்கொண்டேயாவது நூல் நூற்கலா மன்றோ? இதனால் சிறு ஊதியம், மன அமைதி, சோர்வு நீங்கிய சுறுசுறுப்பு உண்டாகுமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/207&oldid=1203106" இலிருந்து மீள்விக்கப்பட்டது