பக்கம்:தமிழ் அங்காடி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  207


நிறைபெய்த மூடைப்பண்டம்" என்னும் பாடற் பகுதிகளால் உணரலாம். ஏறத்தாழ 2400 ஆண்டுகட்குமுன் வாழ்ந்த வரலாற்றுத் தந்தையாகிய 'ஃஎரடோடஸ்' என்னும் யவனர் நம்நாட்டுப் பஞ்சைக் குறித்து. இந்தியாவில் மரங்களில் வளரும் உரோமம் (பஞ்சு); அது ஆட்டு மயிர்க்கம்பளியினும் சிறந்தது” என்று புகழ்ந்துள்ளார்.

பெண்களின் தொழில்:

இன்னும், பொதுவாக எல்லோரும் நூற்றாலும் சிறப்பாகப் பெண்களே நூல் நூற்றனர் என்பதும் புலனாகின்றது. இதனை, புறநானூற்றில் (செய்யுள் - 125) உள்ள “பருத்திப் பெண்டின் பனுவல்’ என்னும் தொடரால் அறியலாம். அப்படியென்றால், பருத்திப் பஞ்சை நூலாக நூற்கும் பெண்ணிடமுள்ள பஞ்சு என்பது பொருள்.

பிழைக்கும் வழி

மேலும், அக்காலத்தில் ஆதரவற்ற பெண்கட்கு இந்நூற்றல் தொழில் உயிர்ப்பிச்சை அளித்து வந்துள்ளது. குறிப்பாக - கணவனை யிழந்த கைம் பெண்கள் இத்தொழிலைச் செய்து, அதனால் வந்த வருவாயைக் கொண்டே, தம்மைத் தாமே காப்பாற்றிக் கொண்டனர் என்பதும் புலனாகிறது. இதனை ‘நற்றிணை' என்னும் சங்க நூலிலுள்ள,

"ஆளில் பெண்டிர் தாளின் செய்த
நுணங்குநுண் பனுவல் போல”

என்ற அடிகளால் அறியலாம். இதன் பொருள்:- “தம்மைக் காப்பாற்றும் ஆள் (கணவர்) இல்லாத பெண்டிர் தம் முயற்சியால் நூற்ற மிகவும் நுட்பமான பஞ்சைப் போல" என்பதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/209&oldid=1203112" இலிருந்து மீள்விக்கப்பட்டது