பக்கம்:தமிழ் அங்காடி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20  தமிழ் அங்காடி


கல்வி

தந்தை சிறந்த கல்விமான் ஆதலின் மைந்தருக்கும் தாமே தொடக்கக் கல்வி புகட்டினார். பின்பு கல்கத்தா நகரில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ந்து பயின்றார். பின்னர் 1879 ஆம் ஆண்டு கல்கத்தா மேற்றிராணியர் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். அறிவியல் கல்விக்காகப் பின்னர் கல்கத்தா மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். மேற்கொண்டு இங்கிலாந்து சென்று எடின்பரோ பல்கலைக் கழகத்தில் படித்தார். இந்தப் பல்கலைக் கழகத்தில் எட்டு ஆண்டுகள் பயின்று பி.எஸ்ஸி. பட்டம் பெற்றார்.

அறிவியல் படிப்போடு வரலாறு, அரசியல் ஆகிய துறைகளிலும் ஆராய்ச்சிகள் வெளியிட்டுத் தம் திறமையை வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்தார். இந்தியாவில் இவருக்கு ஏற்ற பதவியை இந்திய அரசால் கொடுக்க முடியவில்லை. எனவே, கல்கத்தா மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக அமர்ந்தார். பெரிய பதவிகளை வெள்ளையர்களுக்கே தந்ததால் இவர் படிப்புக்கு ஏற்ற பெரிய பதவி பெறும் வாய்ப்பு இல்லாமல் போயிற்று. கல்லூரியில் இருந்த போதே பல ஆய்வுகள் மேற்கொண் டிருந்தார்.

வேதியியல் பொருள்களையும் தரம் மிக்க மருந்துகளையும் சொந்த நாட்டிலேயே தயாரித்து நாட்டிற்குப் பேரும் புகழும் வாங்கித்தர வேண்டும் என்பது ராயின் பெரு விருப்பமாகும். அதற்காக அரிதின் முயன்று ஆய்வு செய்து கண்டுபிடித்தவற்றை இந்திய நாட்டிற்கே உரியனவாக ஒப்படைத்தார்.

தமது சொந்த வருவாயைக் கொண்டு கல்கத்தாவில் வேதியியல் தொழில் கூடம் அமைத்தார். இன்றைக்கு இந்தியாவிலேயே இதுதான் பல கோடி உரூபா மதிப்புள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/22&oldid=1203076" இலிருந்து மீள்விக்கப்பட்டது