பக்கம்:தமிழ் அங்காடி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220  தமிழ் அங்காடி


திருவடிகளில் பூப்படை (அர்ச்சனை) செய்யத் தொடங்கினார். ஒரு பெயருக்கு ஒரு மலர் வீதம் ஆயிரம் திருப்பெயர்களைச் சொல்லி ஆயிரம் மலர்களை இடுவது திட்டம். நடுவில் வழக்கம்போல், சிவன் திருமாலின் அன்பைச் சோதிக்க ஒரு தாமரை மலரைக் குறையச் செய்துவிட்டார். திருமால் ஆயிரமாவது பெயரைச் சொல்லி மலர் எடுக்கத் தொடங்கிய போது, மலர் இல்லை. உடனே தம் கண்களில் ஒன்றைத் தோண்டி எடுத்துச் சிவனடியில் இட்டுப் பூப்படையை (அர்ச்சனையை) முடித்து ஆழி பெற்றார். இஃது ஒரு புராணக்கதை. இதற்கு உரிய அகச்சான்றுகள் வருமாறு:

திருநாவுக்கரசர் தேவாரம்

“தடமலர் ஆயிரங்கள் குறைவு ஒன்றதாக
நிறைவு என்று தன்கண் அதனால்
உடன்வழி பாடு செய்த திருமாலை
எந்தை பெருமான் உகந்து மிகவும்...”
(தசபுராணம், 10)

நால்வர் நான்மணிமாலை

"கடல்நிற வண்ணன் கண்ணொன் றிடந்து
மறைச்சிலம் பரற்றும் மலரடிக்கு அணியப்
பரிதி கொடுத்த சுருதி நாயகற்கு” (12)


நக்கீர தேவநாயனார்
போற்றித் திருக்கலி வெண்பா

“சக்கரத்தால் ஈர்ந்து அரிதன்
தாமரைக்கண் சாத்துதலும்
மிக்கஅஃது அன்று ஈந்த விறல் போற்றி”

(23, 24)

மேற்கூறிய பாடல் பகுதிகளால் திருமாலின் கண்ணே தாமரை யாயினமை அறியப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/222&oldid=1209692" இலிருந்து மீள்விக்கப்பட்டது