பக்கம்:தமிழ் அங்காடி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228  தமிழ் அங்காடி



மா: ஆம் ஐயா. அடுத்து வெண்பாவைப் பற்றிச் சொல்ல வேண்டுகிறேன்.

ஆ: நல்லது கேள். இரண்டடி முதல் பன்னிரண்டு அடிவரை வெண்பா அமையலாம்; இரண்டடி வெண்பா குறுவெண்பாட்டு எனப்படும்; பன்னிரண்டடி வெண்பா நெடுவெண்பாட்டு எனப்படும் - இவை தொல்காப்பியச் செய்திகள். இக்காலத்தில், குறுவெண்பாட்டு குறள்வெண்பா எனவும், நெடுவெண் பாட்டு பஃறொடை வெண்பா எனவும் வழங்கப்படுகின்றன. பதினெட்டுக் கீழ்க்கணக்கு நூல்களுள், களவழி நாற்பது என்னும் நூலில் ஆறடி வெண்பாக்கள் சில உள; நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, ஆசாரக் கோவை ஆகிய நூல்களில் ஐந்தடி வெண்பாக்கள் சில உள்ளன; திருக்குறள் இரண்டடி, மற்ற நூல்கள் நான்கடி வெண்பாக்களால் ஆனவை.

தொல்காப்பியர் காலத்தில் இன்னிசை வெண்பா இருந்தது - நேரிசை வெண்பா இல்லை. முதல் மூன்றடி ஒரே மாதிரியாய் வருவது இன்னிசை வெண்பா; இரண்டாம் அடியின் நான்காவது சீர் தனிச்சீராய் அமைவது நேரிசை வெண்பா. இன்னா நாற்பது, இனியவை நாற்பது முழுவதும் இன்னிசை வெண்பாவே. சிறுபஞ்சமூலம், ஏலாதி முழுவதும் நேரிசை வெண்பாவே. நாலடியார், நான்மணிக்கடிகை ஆகியவை இரு வகையும் கலந்தவை. தொல்காப்பியத்தில் இல்லாத நேரிசை வெண்பா, பிற்காலத்தில் யாப்பருங்கல நூலிலும் காரிகை நூலிலும் தனி ஒரு வகையாக இடம் பெற்றுள்ளது.

மா: அடுத்து, - கலிப்பாவைப் பற்றிச் சொல்ல வேண்டுகிறேன்.

ஆ: சரி, கவனி. கலிப்பாவை ஒரு வகையில் வெண்பா போன்றது எனலாம். ஒத்தாழிசைக் கலி, கலி வெண்பாட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/230&oldid=1204404" இலிருந்து மீள்விக்கப்பட்டது