பக்கம்:தமிழ் அங்காடி.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  231



மா: நல்லது ஐயா, அணி என்றால் என்ன ஐயா?

ஆ: அணியா? கருத்துகளை அழகாக அறிவிப்பது - சுவையாக அறிவிப்பது - நயம்பெற அறிவிப்பது - கற்பனை கலந்து அறிவிப்பது அணி யெனப்படும். அணி என்னும் சொல்லுக்கு அழகு-அலங்காரம் எனப் பொருள் கூறப்படும்.

தொல்காப்பியர், எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருள் இலக்கணம் ஆகியவற்றிற்குத் தனித்தனி அதிகாரங்கள் அமைத்திருப்பது போல, யாப்பிலக்கணத்திற்குத் தனி அதிகாரம் அமைக்க வில்லை; பொருள் அதிகாரத்திற்குள்ளேயே, செய்யுளியல் என ஒர் இயல் அமைத்து, அதில் யாப்பிலக்கணத்தை விளக்கியுள்ளார் எனச் சென்ற வகுப்பில் பார்த்தோம் அல்லவா?

மா: ஆம் ஐயா.

ஆ: அதே போல, பொருளதிகாரத்துக்குள்ளேயே ‘உவம இயல்’ என ஒர் இயல் அமைத்து அணி தொடர்பான செய்திகளை ஒரளவு கூறிச் சென்றுள்ளார்.

மா: அப்படியா ஐயா!

ஆ: ஆம். இன்னும் கேள். தொல்காப்பியர் உவமை’ என்னும் ஒரணியைப் பற்றி மட்டுமே விரிவாகக் கூறியுள்ளார். ஆனால், அணியியல் என்னும் நூலில் இருபத்தேழு அணிகளும், தண்டியலங்காரம் என்னும் நூலில் பொருளணி முப்பத்தைந்தும் சொல்லணி பலவும் கூறப்பட்டுள்ளன. அணியியல் என்னும் ஒரு நூல் பற்றிய செய்தி, தொல்காப்பிய உரையாசிரியராகிய சேனாவரையரின் உரையினால் தெரிய வருகிறது.

மா: அணியிலக்கணம் பற்றிய வேறு நூல்கள் பற்றியும் சொல்லுங்கள் ஐயா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/233&oldid=1204411" இலிருந்து மீள்விக்கப்பட்டது