பக்கம்:தமிழ் அங்காடி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232  தமிழ் அங்காடி



ஆ: சொல்கிறேன். தண்டி ஆசிரியர் இயற்றிய ‘தண்டியலங்காரம்' என்னும் அணியிலக்கணத்திற்குப்பின், திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பார் மாறன் அலங்காரம் என்னும் அணியிலக்கண நூல் இயற்றியுள்ளார். இதில் அறுபத்து நான்கு அணிகள் விளக்கப்பட்டுள்ளன. இந்நூல் பதினாறாம் நூற்றாண்டில் இயற்றப் பெற்றதாகும். குவலயானந்தம் என்னும் நூலில் நூறு அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொருவரும் தத்தம் கருத்துகட்கு ஏற்ப அணிகளைப் பலவாக விரித்துச் சென்றுள்ளனர்.

மா: அணி பற்றிக் கூறும் நூல்கள் இன்னும் உள்ளனவா ஐயா?

ஆ: உள்ளன. பதினோராம் நூற்றாண்டில் புத்த மித்திரனாரால் இயற்றப் பெற்ற வீர சோழியம் என்னும் நூலும், பதினேழாம் நூற்றாண்டில் வைத்திய நாத தேசிகர் இயற்றிய 'இலக்கண விளக்கம்' என்னும் நூலும், பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எழுதிய ‘தொன்னூல் விளக்கம்’ என்னும் நூலும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் முத்துவீர நாவலர் என்பவர் இயற்றிய ‘முத்து வீரியம்’ என்னும் நூலும் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணம் பற்றியும் கூறுகின்றன. இந்நூல்களில் உள்ள அணியதிகாரப் பகுதியில் பல அணிகள் கூறப்பட்டுள்ளன. பதின் மூன்றாம் நூற்றாண்டில் பவணந்தி முனிவர் என்பார் இயற்றிய நன்னூலிலும் ஐந்திலக்கண அதிகாரங்களும் இருந்ததாகவும், பின்னர் எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் மட்டுமே கிடைத்தன; பிந்திய மூன்று அதிகாரங்களும் கிடைக்கவில்லை என்பதாகவும் ஒருசிலர் உரைக்கின்றனர். இவ்வாறு அணியிலக்கணம் பல நூல்களில் கூறப்பட்டுள்ளது. தெரிந்து கொண்டாயா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/234&oldid=1204414" இலிருந்து மீள்விக்கப்பட்டது