பக்கம்:தமிழ் அங்காடி.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  243


செல்வச் செழுமை என்றால், பல வகையான பொருள்கள் இருக்க வேண்டும்; மற்றும், அவற்றுள் ஒவ்வொரு வகையிலும் எண்ணிக்கையில் பல இருத்தல் வேண்டும். இந்த அடிப்படையிலேயே இங்கே இலக்கண நூல் பெயர்கள் தரப்பட்டுள்ளன.

இதுவரையும், இயல் தமிழ் இலக்கணச் செழுமையின் எண்ணிக்கை அளவைப் பார்த்தோம். இனி இசைத் தமிழ், கூத்துத் தமிழ்பற்றிப் பார்க்கலாம். தமிழ் முத்தமிழ்ப் பிரிவு உடையதாயிற்றே.

இசைத் தமிழ்

பண்டு இசைத் தமிழ் இலக்கண நூல்களும் தமிழில் இருந்தன. பெரும்பாலும் அவை இப்போது மறைந்து விட்டன - மறைக்கடிக்கப்பட்டன. 'இசை மரபு' என்னும் தமிழ் இசை நூலை மறப்பதற்கில்லை. தொல்காப்பியம் - நூல் மரபு என்னும் இயலில் உள்ள -

"அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை டேலும்
உளவென மொழிய இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்" (33)

என்னும் நூற்பாவில் உள்ள 'இசையொடு சிவணிய நரம்பின் மறை' என்னும் பகுதி, தமிழில் இசை இலக்கண நூல்கள் நிரம்ப இருந்தன என்பதற்குச் சான்றாகும். 'என்று அறிஞர்கள் சொல்லுவார்கள்’ என்னும் பொருளில் என்மனார் புலவர் என்று கூறியிருப்பதைக் கொண்டு, முன்பிருந்த பல இசைநூல்களை உள்ளத்தில் கொண்டு கூறியுள்ளார் என்பது புலனாகும்.

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் இசையாசிரியரின் இயல்பு, தண்ணுமைக்காரன் இயல்பு, இயல்கவிஞன் இயல்பு, குழல் ஆசிரியன் இயல்பு, யாழ் ஆசிரியன் இயல்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/245&oldid=1204434" இலிருந்து மீள்விக்கப்பட்டது