பக்கம்:தமிழ் அங்காடி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246  தமிழ் அங்காடி



நாடகத் தமிழ்

பண்டு நாடகத் தமிழ் இலக்கண நூல்கள் மிக்கிருந்தமை தொல்காப்பியத்தாலும் பிறவற்றாலும் அறியப் பெறும். தொல்காப்பியர் அகத்திணையியலில்

        "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்,
        பாடல் சான்ற புலனெறி வழக்கம்” (56)

என்று கூறியிருப்பதிலிருந்து, நாடகத்தமிழ் என்னும் கூத்துத் தமிழின் பெருக்கத்தை உய்த்துணரலாம்.

சிலப்பதிகாரம் - அரங்கேற்று காதையில், ஆடலாசிரியன் இயல்பு, ஆடல் அரங்கின் இயல்பு, அரங்க மேடை, அரங்க அமைப்பு, ஆடும் இயல்பு ஆகியவை போதிய அளவு விரிவாகத் தரப்பெற்றுள்ளன.

பண்டு தமிழில் இருந்த நாடக இலக்கண நூல்கள் இப்போது கிடைக்கவில்லை. சில நூல்களின் பெயர்கள் மட்டும் கிடைக்கின்றன. பாண்டியன் மதிவாணனார் இயற்றிய மதிவாணர் நாடகத் தமிழ் நூல், முறுவல், சயந்தம், என்னும் நூல்கள் அடியார்க்கு நல்லார் காலத்தில் ஆளுகையில் இருந்ததாக உயர்த்துணரப் படுகிறது.

சூரிய நாராயண சாத்திரியார் எனப்படும் பரிதிமால் கலைஞர் என்பவர், பத்தொன்பதாம் நூற்றாண்டில் 'நாடக இயல்' என்னும் நாடக இலக்கண நூல் ஒன்று படைத்துள்ளார்.

முத்தமிழுள் ஒன்றாகிய நாடகத் தமிழுக்கு இலக்கண நூல்கள் பல தோன்றியிருக்கவேண்டும். அவற்றைத் தமிழ்மொழி எப்படியோ இழந்து விட்டது.

இதுகாறும் தமிழ் இலக்கணச் செழுமையின் உடல் பகுதி பற்றிப் பார்த்தோம். இனி உள்ளிருக்கும் உயிர்ப் பகுதிகள் சில பற்றிப் பார்க்கலாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/248&oldid=1204444" இலிருந்து மீள்விக்கப்பட்டது