பக்கம்:தமிழ் அங்காடி.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  247



5. எழுத்துச் செழுமை

தமிழ் மொழியில் எழுத்து வளம் மிகுதி. இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் இப்போது மூத்த மொழியாகக் கருதப்படும் கிரேக்க மொழியில் 24 எழுத்துகளே உள்ளன. அதற்கு அடுத்ததாகிய இலத்தீன் மொழியில் 25 எழுத்துகளே உள்ளன. இலத்தீன் வழி வந்த பிரெஞ்சு முதலிய மொழிகளில் 26 எழுத்துகள் உள்ளன. இலத்தீனில் W என்னும் எழுத்து இல்லை. பிரெஞ்சிய் W என்னும் எழுத்தை இரண்டு v என்னும் பொருளில், Double V (தூப்ளவே) என்கின்றனர். ஆங்கிலத்தில் W என்னும் எழுத்து இரண்டு U என்னும் பொருளில் டபிள்யூ (Double U) எனப்படுகிறது. ஆங்கிலத்தில் W என்னும் எழுத்துக்குப் பல இடங்களில் ஒலி இல்லை. Widow, Window என்னும் சொற்களின் இறுதியில் உள்ள w ஒலிபெறவில்லை. ஒருவேளை, தொடக்கத்தில் விடோவ், விண்டோவ் என்று ஒலிக்கப் பெற்றிருக்கலாமோ? முதலில் உள்ள W என்னும் எழுத்தின் பயனை V என்னும் எழுத்தைக் கொண்டே நிறைவு செய்து கொள்ளலாம்.

எனவே, குறைந்த எழுத்துகளால் ஐரோப்பிய மொழிகள் இயங்கும்போது, தமிழில் இவ்வளவு எழுத்துகள் ஏன் என்று வினவலாம்.

ஐரோப்பிய மொழியில் குறில்-நெடில் வேறுபாடில்லை. அதனால், நெடுநல்வாடை-Nedunalvadai என்பது நெடுநாள் வடை என்று ஒலிக்கப்படும் இரங்கத்தக்க நிலை உள்ளது.

மற்றும் ஐரோப்பிய மொழிகளில் உயிர்மெய் எழுத்து இல்லை. இதனால், முருகு என்னும் மூன்றெழுத்துத் தமிழ்ச் சொல்லை ஆங்கிலத்தில் Muruku என ஆறெழுத்துகளாலும், பிரெஞ்சில் Mouroukou என ஒன்பது எழுத்துகளாலும் எழுத வேண்டிய நிலை உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/249&oldid=1210496" இலிருந்து மீள்விக்கப்பட்டது