பக்கம்:தமிழ் அங்காடி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248  தமிழ் அங்காடி



எனவே, குறில் - நெடில் - உயிர்மெய் எழுத்துகள் இருப்பதால் தமிழ் முதலிய திராவிட மொழிகளில் எழுத்துகள் மிகுதியாக உள்ளன.

சமசுகிருத மொழியிலும் அதனை ஒட்டியுள்ள வட இந்திய மொழிகளிலுங்கூடக் குறில் - நெடில் - உயிர்மெய் எழுத்துகள் உள எனில், இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த சமசுகிருதம் தமிழ் மொழியைப் பின்பற்றியே எழுத்துப் பெருக்கம் செய்து கொண்டிருக்க வேண்டும். சமசுகிருதம் என்னும் சொல்லின் பொருள், ‘திருத்திச் சீராக்கப்பட்டது' என்பதாம். வேதத்திற்கு எழுதாக் கிளவி என்னும் பெயர் உள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. சமசுகிருதக்காரர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகே, இப்போதுள்ள எழுத்தமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

51. மெய்யெழுத்து

தமிழ் மொழியில், ஆங்கில மெய்யெழுத்துகளை விட ஐந்து மெய்யெழுத்துகள் குறைவாக-அதாவது பதினெட்டு மெய்யெழுத்துகளே உள்ளன. இவற்றுள் க ச ட த ப ற ஆறும் வல்லினம். ஞ ண ந ம ன ஆறும் மெல்லினம். ய ர ல வ ழ ள ஆறும் இடையினம். இந்த அமைப்பும் ஒருவகைச் செழுமையே.

சமசு கிருதத்தில் க, ச, ட, த, ப என்னும் ஐந்திலும் நான்கு நான்கு ஒலிகள் உள்ளன. வட மொழியில் க ஒலிப்பில், க, க்க, ங்க, ங்ஙக - என நான்கு ஒலிப்புகள் உள்ளன. தமிழில் இந்த அமைப்பு இல்லையே எனச் சிலர் குறை கூறுகின்றனர். தமிழ் செழுமையான மொழி என்பது மட்டும் அன்று - தமிழ் இனிமையான மொழி என்பதும் நினைவிருத்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/250&oldid=1204446" இலிருந்து மீள்விக்கப்பட்டது