பக்கம்:தமிழ் அங்காடி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250  தமிழ் அங்காடி



                "இசைகெடின் மொழிமுதல் இடைகடைநிலைநெடில்
                அளபெழும் அவற்றவற்று இனக்குறில் குறியே"
(36)

என்று கூறியுள்ளார்.

ஒலி (இசை) குறைந்தால் நெடில் அளபெடுக்கும் என இலக்கண விளக்கம், முத்து வீரியம், மாபுராணம் முதலிய நூலாசிரியர்களும் கூறியுள்ளனர்.

மேற்குறிப்பிட்டுள்ள அனைவரின் கருத்தும் தவறு. ஒலி நிரப்புவதற்காக - இடம் அடைப்பதற்காக அளபெடைகள் தொடக்கக் காலத்தில் தோன்றி யிருக்க முடியாது. பொருள் பெறுமானம் கருதியே அளபெடை

தோன்றுகிறது.

              "கெடுப்பது உம் கெட்டார்க்குச்சார்வாய் மற்றாங்கே
              எடுப்பது உம் எல்லாம் மழை” (15)

என்னும் குறள்பாவில், கெடுப்பதும், எடுப்பதும் என்று இருந்தாலேயே ஒசை (சீர்-தளை) கெடவில்லை. அங்ஙனமிருந்தும், ‘து’ என்னும் குறில் ‘து’ என நீண்டு பக்கத்தில் ‘உ’ பெற்று அளபு நீண்டுள்ளது. இது இனிய இசைக்காக அளபெடுத்தது - எனவே, இன்னிசை அளபெடையாகும் எனப் பலரும் கூறுவர்.

இங்கே என்ன இசை வேண்டியுள்ளது? கெடுப்பது உம், எடுப்பது உம் என்ற அளபெடைகளில், மழையின் வரம்பு கடந்த ஆற்றலை வலியுறுத்தி நீட்டி நெளித்துப் பலகையைத் தட்டிப் பேசுவது போன்ற பொருட்குறிப்பு அமைந்துள்ளது.

இவ்வாறு பொருள் கருதி எழுந்த அளபெடைகளைக் கண்ட நூலாசிரியர்கள், ஓசை குன்றும் இடங்களிலும் அளபெடுக்கலாம் எனத் தவறாக எண்ணிக் கண்ட கண்ட இடங்களில் அளபெடை போடத் தொடங்கி விட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/252&oldid=1204450" இலிருந்து மீள்விக்கப்பட்டது