பக்கம்:தமிழ் அங்காடி.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  253


மொழிக்கு ஒர் இனிமை-சுவைதருவதோடு, வினையின் தொடர்ச்சியையும் அழுத்தம் திருத்தத்தையும் தருகிறது. இஃதும் ஒரு வகைச் செழுமையே. சொல்லிச் சொல்லிப் பார்க்கின் சுவை தெரியும்.

5.5 வினையெச்ச வாய்பாடு

செய்து, செய்பு. செய்யா, செய்யூ, செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர் முதலியன வினையெச்ச வாய்பாடுகளாக இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ளன.

‘செய்’ என்னும் வினைச் சொல்லின் அடிப்படையில் வாய்பாடு அமைக்காமல், தின்று, தின் னுபு, தின்னா, தின்னூ, தின் றென, தின்ன, தின்னின், தின்னிய, தின்னியர் எனத்'தின்’ என்னும் வினையின் அடிப்படையிலோ அல்லது, கொய்து, கொய்பு, கொய்யா முதலியனவாகக் 'கொய்’ என்னும் வினையின் அடிப்படையிலோ வாய்பாடு அமைத்திருக்கக் கூடாதா என்னும் வினா எழலாம். எந்த வினையை எடுத்துக் கொள்ளினும் எல்லாமே செய்தல் தானே-அதனால் 'செய்’ என்னும் பொது வினையின் அடிப்படையில் வாய்பாடுகள் அமைக்கப்பட்டன.

நல்லது. து, பு, ஆ, ஊ, என, அ, இன், இய, இயர் என்னும் இறுதிகளில் முடியும் வினையெச்சங்கட்கு இந்த வாய்பாடு பொருந்தும்.

ஆனால்,ஓடி, ஆடி,விளங்கி, மயங்கி, விலக்கி, கலக்கி, எ.ை ‘இ' விகுதி பெற்று முடியும் இறந்தகால வினையெச்சங்கட்குத் தொல்காப்பியரோ - நன்னூலாரோ பொது வாய்பாடு கூறாதது ஏன்? 'செய்’ அடியோடு 'இ' சேர்த்து, 'செய்யி’ என ஒரு வாய்பாடு கூறியிருக்கக் கூடாதா? கூறுவதால் ஒன்றும் கெட்டுவிடாது. இதைச் 'செய்து' வாய்பாட்டில் அடக்குவது பொருந்தாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/255&oldid=1204454" இலிருந்து மீள்விக்கப்பட்டது