பக்கம்:தமிழ் அங்காடி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260  தமிழ் அங்காடி


(General Tendencies) பின்பற்றலும் (Imitation) ஒன்றாகும் . எனவே, பிழையில்லாப் பேச்சைக் கேட்டாலேயே, பிழையின்றிப் பேசவியலும், பிழையின்றிப் பேசினாலேயே, பிழையின்றிப் படிக்கவோ எழுதவோ இயலும்.

ஆகவே, மொழியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களுள் பிழையின்றிப் பேசுதலும் பிழையின்றி எழுதுதலும் மிகவும் இன்றியமையாதனவாகும்.

அடுத்த ஒரு சீர்திருத்தம், தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலக்காமல் எழுத வேண்டியதாகும். மொழி என்பது கருத்தைப் புரியச் செய்யும் ஒரு கருவி (Tool Subject)தானே. எப்படிப் பேசினால் என்ன - எப்படி எழுதினால் என்ன - என்று சிலர் கேட்கின்றனர். இவ்வாறு இடத்திற்கு இடம் வேறுபட்ட நிலையில் கண்டபடிப் பேசியதாலும் எழுதியதாலுமே ஒரு மொழி பல மொழிகளாகப் பிரிந்தது என்னும் செய்தி மீண்டும் நினைவுக்கு வரவேண்டும்.

வளர்ந்து வரும் புதிய அறிவியல் செய்திகளைக் கூறப் போதுமான சொற்கள் தமிழில் இல்லையே என்கின்றனர் பலர். எலெக்ட்ரிசிட்டி (Electricity) என்பதை 'மின்' எனவும், ரேடியோ (Radio) என்பதை 'வானொலி' எனவும், டெலி - விழ்சன் என்பதைத் (Tele - vision) தொலைக்காட்சி எனவும் குறிப்பிடுவது போல், இருக்கும் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியும், புதிய சொற்களை உருவாக்கியும் அறிவியல் செய்திகளை வெளியிடல் வேண்டும். அவ்வாறு எழுதும் தமிழ்ச் சொல்லுக்குப் பக்கத்தில் அடைப்புக் ( ) குறிக்குள் ஆங்கிலச் சொல்லை எழுதலாம். புதிய தமிழ்ச் சொல் கண்டுபிடிப்பது அரிது எனில், அந்த ஆங்கிலச் சொல்லை ஒலி பெயர்ப்பு (Transliteration) செய்து தமிழ் எழுத்தால் எழுதிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/262&oldid=1204468" இலிருந்து மீள்விக்கப்பட்டது