பக்கம்:தமிழ் அங்காடி.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  265


புலவர்களே - பன்னூல்கள் தந்த தமிழ்ப் பாவாணர்களே விருப்பு வெறுப்பின்றி ஒருமுகமாய்த் தேர்ந்தெடுத்து விட்டனர். ஆம்; உள்ள உள்ள உள்ளம் உருக்கும் அந்தத் தமிழ்நூலை, ஆராய ஆராய அறிவு ஊற்றெடுக்கச் செய்யும் அந்தத் தமிழ் நூலை, சிந்திக்கும் சிந்தைக்கு இனிய - அதுமட்டுமா - கேட்கும் செவிக்கும் இனிய - அதுமட்டுமா-சொல்லும் வாய்க்கும் இனிய அந்தத் தமிழ் நூலை அவர்கள் அப்போதே தேர்ந்தெடுத்து விட்டனர்.

‘உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு”

என்றார் மாங்குடி மருதனார்.

“வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்கு
ஆய்தொறும் ஊறும் அறிவு”

என்றார் உருத்திர சன்ம கண்ணர்.

“சிங்தைக்கு இனிய செவிக்கினிய வாய்க்கினிய...
வள்ளுவனார் பன்னிய இன்குறள் வெண்பா’

என்றார் கவுணியனார்.

“வள்ளுவர் உலகம் கொள்ள மொழிந்தார் குறள்”

என்றார் நரி வெரூஉத் தலையார்.

“உலகடைய உண்ணுமால்
வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து”

என்றார் ஆலங்குடி வங்கனார்.

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்ற பாடல் சுப்பிரமணிய பாரதியாரின் சொந்தச் சரக்கன்று. சொந்தச் சரக்காயினும் புதிய சரக்கன்று. முன்னோர் மொழிந்த மொழிப் பொருளே அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/267&oldid=1210498" இலிருந்து மீள்விக்கப்பட்டது