பக்கம்:தமிழ் அங்காடி.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274  தமிழ் அங்காடி


கன்னடத்தில் ளகரமும், தெலுங்கில் டகரமும் பெற்றுள்ளன. சில எடுத்துக் காட்டுகள்: ஏழு தமிழ்; ஏளு கன்னடம், ஏடு என்பது தெலுங்கு. கோழி தமிழ், கோளி கன்னடம், கோடி தெலுங்கு. இவ்வாறே, கூழு தமிழ், கூளு கன்னடம் - கூடு தெலுங்கு. உப்பு லேனி கூடு, பப்பு லேனி கூடு, பிரியமு லேனி கூடு என வேமன்னா என்னும் தெலுங்குப் புலவர் தமது வேமன்ன பத்தியம் என்னும் நூலில் உணவைக் கூடு எனக் குறிப்பிட்டுள்ளார். இது நிற்க-

வள்ளுவர், அரசனுக்கு இருக்க வேண்டிய ஆறு உறுப்புகளுள், கூழ் அல்லாத மற்ற ஐந்துக்கும், அமைச்சு, அரண், படை, நட்பு, குடிமை என அவற்றின் பெயராலேயே தலைப்புப் பெயர் தந்துள்ளார். கூழுக்கு மட்டும் பொருள் செயல்வகை என்னும் தலைப்புப் பெயர் தந்துள்ளார்.

இந்தக் காலத்தில் எதை எதையோ பொருளியல் (Economics) என்கிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் (Pre - Historical period) இயற்கையாயுண்டான காய் கனி முதலியவற்றை பெற்றது(Primitive Economics) தொடக்கக் காலப் பொருளியல் எனப்படும்.

பின்னர்ச் செயற்கையாகப் பயிரிட்டுக் கிடைத்த தானியங்களைக் கொண்டு கூழாக்குதல், நெசவு செய்தல், கம்மியம், பண்டமாற்று முதலியன தோன்றி வளரலாயின. இது 'இடைக்கால பொருளியல் (Mediaeval Economics) எனப்படும்.

பொருளியல் கோட்பாடு

பொருளியலில் முதலாளி முறை(capitalism), பொதுவுடைமை (communism) என இருமுறைகள் ஏற்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/276&oldid=1204492" இலிருந்து மீள்விக்கப்பட்டது