பக்கம்:தமிழ் அங்காடி.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278  தமிழ் அங்காடி


எனவும், மதுரைக் காஞ்சியில்

"மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்
நாளங்காடி நனந்தலைக் கம்பல்" (429-430)

எனவும், சிலப்பதிகாரத்தில்

‘கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஒதையும்
நடுக்கின்றி நிலைஇய நாளங்காடி’ (5:63, 64),

‘நாள்மகிழ் இருக்கை நாளங்காடியில்
பூமலி கானத்துப் புதுமணம் புக்கு’ (5:196, 197)

எனவும் அங்காடிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதை விரிப்பின் பெருகும்.

தமிழ்நாட்டு அங்காடி பற்றிப் பல நூல்களில் கூறப் பட்டிருப்பினும், 'பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்' என்பது போல், சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அங்காடி வாணிகம் பற்றிச் சுருங்கத் தொகுத்துக் காண்பாம்:

மனையறம் படுத்த காதை

பண்டைக் காலத்தில் சோழர்களின் தலை நகராகிய புகார் ஒரு பெரிய வாணிகக் களமாக (சந்தையாக) விளங்கிற்று. புதிய புதிய நாடுகளிலிருந்து பல்வேறு பண்டங்கள் கால் வழியாகவும், கப்பல் வழியாகவும் கொண்டுவரப் பெற்றுப் புகாரில் ஒருங்கு குவிக்கப் பட்டிருந் தனவாம். இது சிலம்பு - மனையறம் படுத்த காதையில்,

“அரும்பொருள் தரூஉம் விருந்தின் தேஎம்
ஒருங்கு தொக்கன்ன உடைப்பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவன ரீட்ட...” (5-7)

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விருந்தின் தேஎம் = புதிய நாடுகள். ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு பொருள் மிகுதியாக உண்டாக்கப் படலாம். ஒவ்வொரு நாடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/280&oldid=1210518" இலிருந்து மீள்விக்கப்பட்டது