பக்கம்:தமிழ் அங்காடி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  45


செவிப்புலனால் அறிய முடிகிறது. எங்கே - இன்னொரு முறையும் பாடிப் பார்ப்போம்:

     "பஞ்சி ஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
     செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
     அஞ்சொல் இள மஞ்ளுையென அன்னமென மின்னும்
     வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்".

இராமனது வியப்பு

பேரழகு பொருந்திய பெண்ணாக வான் வழியாக வந்த சூர்ப்பண கையைக் கண்ட இராமன் வியப்புற்றான். இந்தப் பெண் நாகர் உலகிலிருந்தா அல்லது விண்ணுலகத்தி லிருந்தா அல்லது இம் மண்ணுலகத்திலிருந்தா - வேறு எவ்வுலகத்திலிருந்து வந்திருப்பாள்! பேரழகிற்கு ஒர் எல்லை இல்லையா! பேரழகின் உயர் எல்லைக்கோட்டில் உள்ள இந்த அழகி யாரோ! இவளுக்கு ஒப்பில்லை.

         "பேர் உழைய நாகர் உலகின்,
              பிறிது வானின்
         பார் உழையின் இல்லது ஒரு
              மெல் லுருவு பாரா
         ஆர்உழை அடங்கும் அழகிற்கு
              அவதி உண்டோ?
         நேரிழையா யாவர் இவர்நேர்
             என நினைந்தான்" (36)

அவதி = எல்லை. நேரிழையர் = மடந்தையர். சூர்ப்பனகையின் மாறு கோலத் தோற்றப் பொலிவு இராமனையேகூட மயக்கிவிட்டது.

மணிமேகலை தெரு வழியே செல்லின், அவளை ஏறிட்டுப் பார்க்காத ஆடவர் பேடியராகத்தான் இருக்க வேண்டும் என்னும் பொருளில்,

           "பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/47&oldid=1204529" இலிருந்து மீள்விக்கப்பட்டது