பக்கம்:தமிழ் அங்காடி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50  தமிழ் அங்காடி



            மாவெலாம் தொலைத்து வெள்ளி மலை எடுத்து
                உலகம் மூன்றும்
            காவலோன் பின்னை காம வல்லியாம்
                கன்னி என்றாள்" (39)

பூவிலோன் = பிரமன் சேவலோன் = விடையூர்தி உடைய சிவன், செங்கையோன் = குபேரன். காவலோன் = இராவணன்.

திருமண ஏற்பாட்டின்போது, பெண் வீட்டுக்காரரும் பிள்ளை வீட்டுக்காரரும் ஒருவர்க்கு ஒருவர்தத்தம் பெருமைகளை அள்ளி வீசுவார்கள். அந்த முறையில், அரக்கி தங்கள் குலப் பெருமையை வாரிக் கொட்டுகிறாள்:

பூவிலோன் புதல்வன் = புலத்தியன். புலத்தியன் மைந்தன் விச்சிரவசு, விச்சுரவசுவின் புதல்வி சூர்ப்பணகை. எனவே, பிரமனுக்கு அவள் கொள்ளுப் பேர்த்தியாம். மற்றும் அவள் செல்வத்தில் செழித்த குபேரனது தங்கையாம். குபேரனோ சிவனுக்கு நண்பனாம்- சிவனோ முப்புரங்களை எரித்தவனாம்.

விச்சிரவசு பாரத்துவாசனின் மகளை மணந்து குபேரனைப் பெற்றானாம். அதே விச்சிரவசு கேகசி என்னும் அரக்கியையும் மணந்து இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை, விபீடணன் ஆகியோரைப் பெற்றானாம். குபேரனுக்கும் சூர்ப்பணகைச்கும் தாய் வேறு வேறு எனினும், தந்தை விச்சிரவசு எனினும் ஒருவனேயாதலின், அவள் குபேரனுக்குத் தங்கை முறையாகிறாள்.

மேலும் அவள் இராவணனுக்கும் தங்கையாவாள். அந்த இராவணனோ எட்டுத் திக்குயானைகளையும் வென்றவனாம்; அம்மட்டுமா! சிவனது கைலை மலையையே தூக்கியவனாம். அம்மட்டுமா! மூன்று உலகங்களையும் ஆள்பவனாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/52&oldid=1202418" இலிருந்து மீள்விக்கப்பட்டது