பக்கம்:தமிழ் அங்காடி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66  தமிழ் அங்காடி



மன்னர்கள் மாற்றார் நாட்டின் மேல் படையெடுப்பதற்காக நல்லநாள் குறிப்பர். அந்த நாளில் போக முடியாவிட்டால், தங்கள் குடை, வாள், முரசு முதலியவற்றை அந்த நல்லநாளில், இருக்கும் இடத்தை விட்டுப் பெயர்த்து வேறோர் இடத்தில் கொண்டுபோய் வைப்பர். இதற்குத்தான் நாள் கொள்ளுதல் என்பது பெயர். வாள் நாட்கோள், குடைநாட்கோள், முரசு நாட்கோள், என்றெல்லாம் இதனைக் குறிப்பிடுவதுண்டு, தொல்காப்பியம்-புறத்திணை இயலில்,

                "குடையும் வாளும் நாள்கோள் அன்றி
                    மடையமை ஏணி மிசை மயக்கமும்" (11)

என்றும், சிலப்பதிகாரத்தில்

                "வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
                    நாளொடு பெயர்த்து..." (591,92)

என்றும், புறப்பொருள் வெண்பாமாலையில்

                "செற்றார்மேல் செலவமர்ந்து
                    கொற்ற வாள் நாள் கொண்டன்று" (39)

                "செற்றடையார் மதில் கருதிக்
                    கொற்ற வேந்தன் குடைநாள் கொண்டன்று" (96)

என்றும் உள்ள பாடல் பகுதிகளால் நாள்கொள்ளல் பற்றி அறியலாம்.

மக்களும் நல்ல நேரத்தில் தொடங்கிவைப்பதும், நல்ல நேரத்தில் பொருள்களை அப்புறம் பெயர்த்தலும் ஆகிய நாள் கொள்ளலை நடத்துகின்றனர்.

சிற்றுார்களில் ஊர்க்கட்டுப்பாடு உண்டு. நெசவு நடக்கும் ஒர் ஊரை எடுத்துக் கொள்வோமே. அங்கே பொங்கல் கழிந்ததும், ஒரு நல்ல நாள் குறிப்பிட்டு, கோயிலில் பூசனை நடத்திப் பின்னரே கட்டுப்பாடாக அனைவரும் பணி தொடங்குவர். இதற்கும் நாள் கொள்ளல் என்பது பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/68&oldid=1202338" இலிருந்து மீள்விக்கப்பட்டது