பக்கம்:தமிழ் அங்காடி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80  தமிழ் அங்காடி


ஆணையால், எல்லா உயிரிகளும் ஒவியம்போல் அசைவற்று இருந்தனவாம். ஈண்டு, சிவப்பிரகாசரின் பிரபுலிங்க லீலை என்னும் நூலில் உள்ள ஒரு காட்சி நினைவிற்கு வருகின்றது. அதாவது:

கின்னரப் பிரமன் என்பவன் சிவன்மீது இசைப் பாடல் இசைக்கும்போது, சிவனது முடியில் உள்ளனவும் ஒன்றுக்கு ஒன்று பகையாயினவும் ஆகிய பாம்பும், பிறைத் திங்களும் அசைவின்றி, செயற்கையாகச் செய்து வைக்கப்பட்டவை போல் இருந்தனவாம். செயற்கையாக அமைக்கப்பட்டது ஒவியமாகவும் இருக்கலாம் - அல்லது பொம்மைகளாகவும் இருக்கலாம்.

                "சங்கரன் சடையில் பாம்பும் தவழ்ந்து
                எதிர் கிடந்த பிள்ளைத்
                திங்களும் செய்த ஒப்ப... கானம்
                முன் பாடி - சென்றான்” (22 - 20)

என்பது பாடல் பகுதி. இதைப்போல், இராவணனின் சூழ்வு அரங்கிற்கு வெளியே எல்லா உயிரிகளும் அசைவற்று இருந்தனவாம்.

பிறவாப் பேறு

இராவணனுடைய நம்பிக்கைக்கு உரிய படைத் தலைவர்களும் தம்பிமார்களும் பிள்ளைகளும் மட்டும் சூழ்வரங்கில் இராவணனுடன் இருந்தார்களாம். இராவணன் உடன் இருந்தவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறலானான்:

குரங்கு நகரை எரித்தது; உறவினர் பலரும் நண்பர் பலரும் மாய்ந்தனர். எங்கும் துன்பம் - மானக்கேடு. இவ்வாறாகியும், என் உயிரானவர் மாண்ட பின்னும் இந்த அரியணையில் என் உடல் மட்டும் உள்ளது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/82&oldid=1202347" இலிருந்து மீள்விக்கப்பட்டது