பக்கம்:தமிழ் அங்காடி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82  தமிழ் அங்காடி


இராவணனுக்கு நேர்ந்த பழி மேலோடான தன்றாம் - மிகவும் ஆழ்ந்ததாம் . அதனால், பழிக்குள் மூழ்கி விட்ட தாகவே கூறியுள்ளான்.

பிறக்கவே இல்லை என்றால் பழியே இல்லையல்லவா? அதனால், பிறக்கவே இல்லை என்பதை நல்ல பேறாகக் (பாக்கியமாகக்) கருதி, 'பிறந்திலம் என்னும் பேறு' என்று மொழிந்துள்ளான்.

செய்ய வேண்டியது யாது என்று உசாவிய இராவணனுக்குப் படைத்தலைவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்து உடையராய்ப் போர் புரிதலே தக்கது எனக் கூறினர். நாம் வாளா இருப்பின், குரங்குக்கு அஞ்சியவர்கள் என்ற பேருடன் நாளைக்குக் கொசுவுக்கும் அஞ்சவேண்டி வரும். குரங்குகளும் மக்களினமும் அரக்கர்களாகிய நாம் உண்ணும் உணவுப் பொருள்களாம்; எனவே, உணவுப் பொருள்கட்கு அஞ்சலாமா - எனத் தலைக்குத்தலை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக முறுக்கேற்றிவிட்டனர்.

புற்றுக்குள் முடங்கிக் கிடக்கும் பாம்பு போல், படைத் தலைவர்கள் நெஞ்சம் புழுங்கினார்களாம்:

                “புற்று உறை அரவு எனப் புழுங்கும் நெஞ்சினர்"

(46)


அரவு = பாம்பு. வெளியில் வரின் மக்கள் அடித்துக் கொன்று விடுவர் என அஞ்சிப் பாம்பு புற்றுக்குள்ளேயே புழுங்கிக்கொண்டு கிடக்கிறதாம். “நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்து உறையும்” என்பது ஒளவையாரின் மூதுரைப் பாடல். படைத்தலைவர்கள் கொலைத் தொழிலாகிய நஞ்சு உடையவர்கள். இராவணன் ஆணையிடாததால், போர் புரிய வாய்ப்பு இல்லையே என உள்ளம் புழுங்குகிறார்களாம். பொருத்தமான உவமை இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/84&oldid=1202358" இலிருந்து மீள்விக்கப்பட்டது