பக்கம்:தமிழ் அங்காடி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  89



'இரும்பு அடிக்கிற இடத்தில் ஈ க்கு என்ன வேலை' என்னும் பழமொழிக்கு ஏற்ப, பட்டறிவு மிக்க முதியோர்கள் சூழும் அவையில் சிறிய பையனுக்கு என்ன வேலை என்பதாக வீடணன் வினவினான்.

வீடணனும் இராவணனும்

பின்னர் வீடணன் இராவணனை நோக்கிக் கூறலானான்: யான் கூறுவதை இகழாமல் கேட்பாயெனில் கூறுவேன். “எள்ளலை யாமெனில் இயம்ப லாற்றுவேன்" (72). எனக்குத் தந்தை, தாய், அண்ணன், தெய்வம் மற்றும் எல்லாம் நீயே. நீ உன் செயலால் அரசப் பதவிப் பேரின்பத்தை இழக்கப் பார்க்கிறாயே என்று நொந்து இதைக் கூறலானேன்.

                “எங்தை நீ யாயும் நீ எம்முன் நீ தவம்
                வந்தனைத் தெய்வம் நீ மற்றும் முற்றும் நீ
                இந்திரப் பெரும்பதம் இழக்கின்றாய் என
                நொந்தனென் ஆதலின் நுவல்வ தாயினேன்” (73)

வீடணன் தமையனது தன்மையை அறிந்தவ னாதலின், அச்சத்துடன், அவன் கவருமாறு பேசி முயன்று பார்க்கிறான். என் நன்மைக்காகச் சொல்லவில்லை - நீ இந்திர பதம் போன்ற இன்பத்தை இழக்கக் கூடாது என உன் நன்மைக்காகவே சொல்கிறேன் என்று மடக்கிப் பேசுகிறான். உலகியலில், ஒருவரைத் திருத்த முயல்பவர், என் நன்மைக்காகச் சொல்லவில்லை - உன் நன்மைக்காகத்தான் சொல்கிறேன் என்று கூறுவதைக் கம்பர் அப்படியே இங்குக் கையாண்டுள்ளார்.

மேலும் தொடர்கிறான்: யான் கல்வி யில்லாதவன் - ஆய்வுத் திறன் பெறாதவன் என்று எண்ணினும், யான் கூறும் சூழ்வுரை தவறுபடும் என்று கருதினும், எனது உரையை முழுதும் கேட்டபின், பொருந்தா தாயின் என்மேல் சினம் கொள்ளலாம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/91&oldid=1202428" இலிருந்து மீள்விக்கப்பட்டது