பக்கம்:தமிழ் அங்காடி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  91


வானளாவ உயர்ந்த பெருமை, இப்போது சீதையாகிய பெண்ணாசையால் கீழிறங்கி இகழ்வு நேருகிறது.

ஒருவர்க்கு மண் அல்லது பெண்ணால் உயர்வோ தாழ்வோ உண்டாகும் என்பதற்கு இராமாயண வரலாறே எடுத்துக் காட்டாகும். மண்ணாசையால் கைகேயி சிறுமையுற்றாள். பெண்ணாசையால் இராவணன் மடிந்தான்.

மண் (நாடு) காரணமாகப் பாரதப் போர் நடந்தது. பெரும்பாலான உலகப் போர்கள் மண்ணாசையின் விளைவேயாகும். சிலம்பில் கோவலன், மணிமேகலையில் உதயகுமாரன் போன்றோர் பெண்ணாசையால் அழிந்தவர்கள்.

இன்றைய செய்தித் தாள்களைப் படிப்பவர்கள், மண் ஆசையும் பெண் ஆசையும் மக்களைப் படுத்தும் பாட்டை நன்கறிவர்.

அண்ணா! நாம் மிக்க வலிமை உடையவர்கள் என்றாலும், கடந்த கால வரலாறுகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆயிரம் தோள்களையுடைய கார்த்த வீரியனிடம் நீ தோற்றுப் போனாய். மற்றும், குரங்கினமான வாலியும் உன்னை வென்று ஓட்டினான்.

வேதவதி என்னும் பெண்ணை நீ வலிந்து தீண்டிய போது, அவள், நான் உன்னைக் கொல்லும் நோயாக வருவேன் என்று வைவு (சாபம்) இட்டாள். அவளே சீதையாக வந்துள்ளாள்.

மாந்தரை எளிதாக எண்ணலாகாது. தசரதன் என்னும் மாந்தர் சம்பரன் என்னும் அசுரனை வெல்லவில்லையா? இராமன் நம்மவரான கரன், தூடணன் முதலியோரை வென்றது மறந்து போமோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/93&oldid=1202440" இலிருந்து மீள்விக்கப்பட்டது