பக்கம்:தமிழ் அங்காடி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94  தமிழ் அங்காடி


தட்டி விரல்களோடு விரல்களைக் கோத்துக்கொண்டு, பற்கள் வெளியில் தோன்ற, மாலையுடன் மார்பும் தோள்களும் குலுங்க ஏளனமாகச் சிரித்துக் கூறலானான்:

                "கேட்ட ஆண்தகை கரத்தொடு
                   கரதலம் கிடைப்பப்
                பூட்டி வாய்தொறும் பிறைக்குலம்
                   வெண்ணிலாப் பொழிய
                வாட்டடம் தவழ் ஆரமும்
                   வயங் கொளி மார்பும்
                தோட்டங்களும் குலுங்க நக்கு
                   இவையிவை சொன்னான்" (100)

ஆண்தகை = இராவணன். கரதலம் = கை. பூட்டி = கோத்து, பிறைக் குலம் = பிறைநிலாப் போல் வளைந்த வெண்மையான கோரப் பற்கள். வெண்ணிலாப் பொழிதல்-பளிச்சிடுதல். வாட்டடம் = வாள்தடம்= எதிரியின் வாளால் ஏற்பட்ட விழுப்புண் உள்ள மார்புப் பகுதி. தோட்டடம் = தோள் தடம் - தோள்கள். தோளும் மார்பும் குலுங்கினால் மாலையும் (ஆரமும்) குலுங்குவது இயல்பு.

விரல்களோடு விரல்களை இறுக்கிக் கோத்துக் கொள்ளுதல், சினமும் வெறுப்பும் கலந்த ஏளன உணர்வின் போது நிகழக் கூடியது.

இந்தப் பாடலில், நடக்கக் கூடியவற்றை உள்ளது உள்ளவாறு உள்ள தன்மையில் கூறியிருத்தலின், இந்த அமைப்பைத் தன்மை அணி எனக் கூறலாம். தொல் காப்பியர் மெய்ப்பாட்டியலில் கூறியுள்ள,

                “எள்ளல் இளமை பேதைமை மடன் என்று
                உள்ளப்பட்ட நகை நான்கு என்ப” (4)

என்னும் நகை நான்கனுள், இராவணனது நகைப்பு எள்ளல் தொடர்பாக ஏற்பட்டதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/96&oldid=1203459" இலிருந்து மீள்விக்கப்பட்டது