பக்கம்:தமிழ் அங்காடி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  97



உரை: “அவைக் கண்ணே நின்று கொம்பர் ஒப்பாளுடைய குவி முலையை நோக்குகின்றவன் இளநெஞ்சன், திண்மையிலன் என்பாரும்’

எனவே, முற்றாத - வயிரம் ஏறாத பிஞ்சு மரத்தை இராமன் துளைத்தது ஆற்றலாகாது என்கிறான்.

மற்றொரு பொருள்: முன்பே துளைக்கப்பட்டு ஒட்டையான மரம் என்பது. அதாவது - இம்மரங்களை வாலி முன்பே துளைத்து ஒட்டையாக்கியுள்ளான் என வால்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, முன்பே உள்ள ஒட்டைத் துளையில் அம்பு புகுந்துபோக எறிந்தது பெரிய ஆற்றலாகாது என்கிறான். ஈண்டு,

                “ஓட்டை நெஞ்சினராய் உழல்வார்களும்” (642)

என்னும் சீவக சிந்தாமணிப் பகுதியும், நளவெண்பாவில் உள்ள

“ஓட்டை மனத்தோடு உயிர் தாங்கி” (சுயம்-64)

என்னும் பகுதியும் ஒப்புநோக்கத் தக்கன.

ஒரு பெண் - அதிலும் கிழவி - கூன் விழுந்தவள் - அதிலும் பணிப் பெண் - அவளுடைய சூழ்ச்சியை வெல்ல முடியாமல் ஓடி வந்தவனா என்னை வெல்லுவான்? என இகழ்கிறான்.

மேலும், என்பால் தன் மனைவியை இழந்து - உயிர் என்ன வெல்லக்கட்டியா? - உயிரை விடாமல் - அவ்வுயிரைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு இருப்பவனா - அதாவது நாணம் இன்றி இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவனா என்னை வெல்லக் கூடியவன்? என்றெல்லாம் எள்ளி நகையாடுகின்றான். ஒரு மானிடன் என்பதும் இகழ்ச்சிக் குறிப்பே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/99&oldid=1203467" இலிருந்து மீள்விக்கப்பட்டது