பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18



இடுகுறிப் பெயர்-காரணப் பெயர்

அன்றியும் தமிழ்ப் பெயர்ச்சொற்கள், இடுகுறிப் பெயர்ச்சொற்கள் காரணப் பெயர்ச் சொற்கள் என்று இரண்டு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இப்பிரிவானது எல்லா பாஷைகளிலும் உண்டு. இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இன்ன காரணத்தினால் இன்ன பொருளுக்கு இப் பெயர் வைக்கப்பட்டதென்று நமக்குத் தெரியுமாயின் அது காரணப் பெயராகும் : அக்காரணம் தெரியாத பெயர்களுக்கு எல்லாம் இடுகுறிப் பெயர்களாக மதிக்கப்படுகின்றன; ஆதியில் மனிதன்பேசத் தொடங்கிய காலத்தில் அவன் ஒவ்வொரு வஸ்துவிற்கும் பெயர் வைத்ததற்கு ஏதாவது காரணம் இருந்திருக்க வேண்டு மென்று தோன்றுகிறது. தொல்காப்பியர் தமிழ் மொழிகளைப்பற்றி இங்ஙனமே அபிப்பிராயப்படுகிறார். அக்காரணத்தை நாம் மறந்து போன பிறகு அப் பெயர்களுக்கு எல்லாம் இடுகுறிப் பெயர்களாக நம்மால் தற்காலம் மதிக்கப்படுகின்றன. காரணத்தைக் கண்டுபிடிப்போமாயின் அவை களைக் காரணப்பெயர் பகுதியில் சேர்க்க வேண்டியவர்களாகிறோம். ஆதி காலத்து மனிதன், தேள், பூனை, எலி என்று அப்பிராணிகளுக்கு ஏன் அப்பெயர் வைத்தாற் என்று நாம் அறியோம். ஆகவே அம்மொழிகள் இடுகுறிகளாக மதிக்கிறோம். தேள் என்பதற்கு தீள் என்று வைத்திருக்கலாகாது? பூனை என்பதற்கு மூஹ என்று ஏன் வைக்க வில்லை ? எலி என்பதை அவன் இலி என்று ஏன் அழைத்திருக்கலாகாது ? என்று கேட்டால், அதற்கு நம்மால் பதில் சொல்ல தற்காலம் முடியவில்லை. இந்த ஜந்துக்களுக்கெல்லாம் ஏதாவது பெயர் வைக்க வேண்டி இப்பெயர்களை இட்டிருக்க வேண்டும். ஆதிகாலத்தில் என்றுதான் கூறக்கூடும். சில பிராணிகளுக்குப் பெயர் வைத்ததற்கு நாம் காரணம் கூறக்கூடும். அப்படிப்பட்ட பெயர்கள் காரணப் பெயர்களாக மதிக்கிறோம், காக்கைக்கு அப்பெயர் வைத்ததற்கு கா கா என்று அது கூவுகிற சப்தத்திலிருந்து ஒலிப் பெயராக வந்திருக்க வேண்டும். இங்ஙனமே குயில் என்கிற பெயரும், அப்பட்சி செய்யும் கூ என்ற சப்தத்தி இன்றும் வந்திருக்க வேண்டுமென்று டாக்டர் கால்ட்வெல் கூறுகிறர். இந்த நியாயத்தை நாம் ஒப்புக்கொண்டால் குயில் எனும் பதம் காரணப் பெயராகும், ஒப்புக்கொள்ளாவிட்டால் இடுகுறிப் பெயராகும். எருமை எருது என்னும் பதங்கள், ஏர் என்னும் பதத்திலிருந்து வந்தன.