பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

 டணங்களை உண்டாக்கி ஜீவிக்க ஆரம்பித்தனர், என்று நாம் ஒப்புக் கொள்வதானால், தமிழ் பாஷையானது மிகவும் புராதனமான பாஷை களில் ஒன்று என்று நிரூபிப்பதற்கு ஒரு ஹேது உண்டாகிறது. மேற்கண்ட ஒவ்வொரு பிரிவினையு மெடுத்துக்கொண்டு அப்பிரிவினர் பேசி யிருக்கக்கூடிய ஆதி வார்த்தைகள், பழமையான தமிழ் மொழிகளா யிருக்கின்றனவா என்று ஆராய்வோம். இச்சந்தர்ப்பத்தில் பேசத் தொடங்கிய காலத்தில், அவர்கள் உபயோகித்த மொழிகள் ஓர் அசை இரண்டு அசைகூடிய சிறு மொழிகளாகவும், பெயர்ச் சொற்களாகவும் இருந்திருக்க வேண்டுமென்பது பாஷாதத்துவ சாஸ்திரிகளுடைய அபிப்பிராயம் என்பதை நாம் கவனிக்க வேண்டியதாம். இதன்பிரகாரம் வேட்டையாடி ஜீவித்த குறீஞ்சிநில மனிதர்கள் ஆதியில் வழங்கிய சொற்களை கவனிப்போம். இவை, காடு, மலை, ஆறு. நாய், நரி, பூனை, எலி, மான், கரடி, யானை, பன்றி, கீரி, மயில். வில், அம்பு, ஈட்டி, வலை, கை, கால், கண், மூக்கு, வாய், காது, தலைமயிர், பாம்பு, தேள், முயல், அகில், ஆமை, தேக்கு, வேல், தோல், தேன், பல். நாக்கு, விரல், வால் போன்ற பதங்களாகும். இவைகளெல்லாம் சுத்த தமிழ் பதங்களாயிருப்பதைக் காண்க.


ஆடு மாடுகள் மேய்ப்பதினால் ஜீவித்த முற்காலத்திய மனிதர்கள் உபயோகித்த பதங்களுக்கு உதாரணமாக, ஆ, ஆடு, மாடு, கோழி, பசு, கன்று, கழுதை, இலை, தழை, புல், நீர், செடி, மரம், காய், கறி, பால். முள் முதலியவைகளைக் கூறலாம்.


சமுத்திரக் கரைகளிலும், நீர்நிலைகளிலும் மீன் முதலியவற்றைப் பிடித்து ஜீவித்த நெய்தல்நில மக்கள் உபயோகித்த பதங்களுக்கு உதாரணமாக, மீன், அலை, கடல், ஏரி, தூண்டி, உப்பு, தோணி, படகு, சுறா, தவளை நுரை, ஆமை முதலியவைகளைக் கூறலாம்.


மருதநில மக்கள் உபயோகித்த பதங்களுக்கு உதாரணமாக, ஏர், எருது, எருமை, மேழி, வீடு, கூரை, மனை, மழை, இடி, மின்னல், மண், சேர், விரை, சோளம், வாழை, மா, பலா, ஊர், பாக்கம் முதலியவைகளைக் கூறலாம். இவைகளெல்லாம் சுத்த தமிழ் மொழிகளேயாம்.


அன்றியும் மேற்சொன்ன நாற்பாங்கு நிலத்தோடும் முதலில் உப யோகித்திருக்கக்கூடிய விகுதிகளுக்கு உதாரணமாக, கொல், தின்