பக்கம்:தமிழ் அமுதம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிந்தியத் தீவுகள் முதலிய கிழக்கு நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தனர்; இவ்வாறே மேற்கு நாடுகளுக்கும் சென்று வாணிகம் செய்தனர்; பெரும் பொருள் திரட்டினர். பல நாட்டாருடனும் தொடர்புகொண்டு வாழ்ந்தனர். இங்ஙனம் கொண்ட உறவால், "யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்னும் கருத்தை வலியுறுத்தினர்.

சங்ககாலப் புலவர்

சங்ககாலப் புலவர் இயற்கைப் பொருள்களை நன்கு அறிந்தவர்; நாட்டிலுள்ள மலைகள், ஆறுகள், விளை பொருள்கள், செய் பொருள்கள், கடல் படு பொருள்கள் முதலியவற்றை நன்கு அறிந்திருந்தனர். கபிலர் என்ற புலவர் பெருமான் குறிஞ்சி நிலப் பூக்கள் பலவற்றின் பெயர்களைக் குறிஞ்சிப்பாட்டில் தெளிவாகக் கூறியுள்ளார். மான்களின் வகைகள் குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு விலங்கின் இயல்பையும் புலவர்கள் கவனித்துள்ளனர்.

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனப் பெயர் பெற்றது ; காடும் காடு சார்ந்த இடமும் முல்லை எனப் பட்டது குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடையே ஒன்றும் விளையாத பொற்றல் நிலம் பாலை எனப்பட்டது; வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனப் பெயர் பெற்றது : கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப் பெயர் பெற்றது. இந்த ஐவகை நிலங்களிலும் உள்ள விளை பொருள்கள், மக்கள்தொழில்கள், விலங்குகள், பறவைகள், அவற்றின் இயல்புகள் என்பன போன்றவை எல்லாம் சங்க நூல்களில் புலவர் பெருமக்களால் விவரமாகக் குறிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான மரங்களின் பெயர்கள், செடி கொடிகளின் பெயர்கள் பழம் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/12&oldid=1459115" இலிருந்து மீள்விக்கப்பட்டது