பக்கம்:தமிழ் அமுதம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. தமிழர் கலைகள்

தமிழின் பழைமை

இன்று உலகில் பேசப்படும் மொழிகள் ஏறத்தாழ மூவாயிரம். இவற்றுள் காலத்தாற் பழைமையும், இலக்கிய வளத்தால் பெருமையும் பெற்றுள்ள மொழிகள் ஆறு. அவை கிரேக்கம், எபிரேயம், இலத்தீன், வடமொழி, சீனம், தமிழ் என்பன என்று மொழியாராய்ச்சியாளர் கூறுகின்றனர். இன்றுள்ள தமிழ் இலக்கண நூல்களுள் மிக்க பழமையானது தொல்காப்பியம். அஃது இன்றைக்குச் சற்றேறக்குறைய இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்குமுன் செய்யப்பட்டது. ஏறத்தாழ ஆயிரத்து அறுநூறு நூற்பாக்களைக் கொண்ட அப்பேரிலக்கணம் செய்வதற்கு அதற்கு முற்பட்ட இலக்கியங்கள் மிகப் பலவாக இருந்திருத்தல் வேண்டுமல்லவா? எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கப் படுவதுபோல இலக்கியத்திலிருந்து எடுக்கப்படுவதுதானே இலக்கணம் ! எனவே, தமிழ் இலக்கியத் தோற்றம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என்பது தெளிவாதல் காண்க. அப்பழைய இலக்கியங்கள் இன்று காணுமாறில்லை. ஆனால் அவற்றின் சத்தாகத் தொல்காப்பியம் இன்று விளங்குகின்றது. அப்பெரு நூலைக் கொண்டும் சங்ககாலப் (கி. பி. 300-க்கு முற்பட்ட) பிறநூல்களைக் கொண்டும் பழந்தமிழர் வளர்த்த கலைகளைப் பற்றிச் சிறிது ஆராய்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/35&oldid=1459154" இலிருந்து மீள்விக்கப்பட்டது