பக்கம்:தமிழ் அமுதம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

சிற்பங்களை அமைத்து வைக்கப்பட்டுள்ள கயிலாசநாதர் கோவில் பல்லவர் காலக் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தஞ்சை இராசராசேச்சரம், கங்கைகொண்ட சோழேச்சரம், திரிபுவன வீரேச்சரம், தாராசுரத்தில் உள்ள இராசராசேச்சரம் என்னும் கோவில்களில் அமைந்துள்ள அற்புத வேலைப்பாடு சோழர்காலக் (கி. பி. 900-1300) கட்டடக் கலைத் திறனை உலகறியச் செய்வனவாகும். தஞ்சை இராசராசேச்சரத்தில், சிவலிங்கம் உள்ள கருவறையின்மேல் பல அடுக்குகள் அமைத்துக் கட்டப்பட்ட விமான அமைப்பு வியந்து போற்றத் தக்கது. அவ்விமானம் 13 கோபுர மாடிகளை உடையது ; 216 அடி உயரமுள்ளது. உச்சியில் 25 அடி சதுர வடிவமுள்ள தளக்கல் போடப் பட்டுள்ளது. அதன் நிறை 80 டன். அக்கல்மீது கலசமும் அதன் தூபியும் அமைந்துள்ளன. தளக்கல்லை மேலே உயர்த்த நான்குமைல் தொலைவிலிருந்து சாரம் போடப்பட்டதாம். நவீன இயந்திரங்கள் இல்லாத அக்காலத்தில் இவ்வற்புத வேலைப்பாடு நடைபெற்றதெனின், தமிழருடைய கட்டடக் கலைத்திறனை என்னென்பது ! தாராசுரம் சிவன்கோவில், குதிரைகள் பூட்டிய உருளைகள் உள்ள தேர் போன்ற அமைப்புடையது. பக்கத்திலுள்ள அம்மன் கோவிலின் முன்மண்டபம் நீரில் மிதக்கக் கூடிய தெப்பம்போல அமைந்துள்ளது.

சோழர்க்குப் பின்வந்த விசயநகர ஆட்சியிலும் மதுரை நாயக்கமன்னர் ஆட்சியிலும் தஞ்சை மகாராட்டிரர் ஆட்சியிலும் கட்டடக்கலை நன்கு வளர்ச்சியுற்றது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் புதுமண்டபமும் திருமலை நாயக்கர் மகாலும் நாயக்கர் காலக் கட்டடக் கலைத் திறனை உலகறியச் செய்வன. ஆயிரக்கால் மண்டபங்களுள் பெரும்பாலன நாயக்கர் காலத்தவை. தஞ்சையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/37&oldid=1459156" இலிருந்து மீள்விக்கப்பட்டது