பக்கம்:தமிழ் அமுதம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

இன்று இம்மரபைச் சேர்ந்த கூத்தியரை அரங்கிற் காணுதல் முயற் கொம்பாகிவிட்டது.

நாடகக் கலை

இசையும் நடனமும் இணைந்து ஆங்காங்கு உரை நடை நிகழவருவது நாடகம். இக்கலையும் பல நூற்றாண்டுகளாக இந்நாட்டில் வளர்ந்து வந்ததேயாகும். பூம்புலியூர் நாடகம், இராசராச நாடகம், இராசராசேச்சர நாடகம் எனப் பல நாடகங்கள் சோழர்காலத்தில் நடைபெற்று வந்தன என்பதைக் கல்வெட்டுக்களால் அறியலாம். சோழ மன்னர் நாடக ஆசிரியர்க்குப் பரிசும் பட்டமும் வழங்கிப் போற்றிவந்தனர். சங்க காலத்தில் நாடகம் கூத்து என்ற பெயருடன் இருந்தது; கூத்தர் நாடக மாடுவர்; கூத்தியர் நாடகமாடும் பெண்மணிகள். தஞ்சை மாவட்டத்துக் கபிஸ்தலத்தில் கூத்தாடியர் தெரு இன்றும் இருகின்றது. இக்கலை பிற்காலத்தில் - மகாராட்டிர மன்னர்கள் காலத்தில் நன்கு வளர்ச்சி பெற்றது. சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் என்பது தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல நாடகங்கள் தோன்றி நாடகக்கலையை நன்கு வளர்த்தன. இவ்விருபதாம் நூற்றாண்டில் டி. கே. எஸ். சகோதரர்களும் பிறரும் நாடகக் கலையை நலமுற வளர்த்து வருகின்றனர். இந்த ஐவகைக் கலைவாணர்க்கும் நமது உளங்கனிந்த பாராட்டு உரியதாகுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/42&oldid=1459161" இலிருந்து மீள்விக்கப்பட்டது