பக்கம்:தமிழ் அமுதம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

பொருளாதாரத்திற்கு ஏற்ப — பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப — விழாக்களையும் களியாட்டங்களையும் நிகழ்த்துவது இயல்பு. கல்வியறிவே யில்லாத கொண்டர், சவரர், தொதவர் முதலிய மலைவாழ் மக்கள் பாடிக்கொண்டே ஆடுவதை இன்றும் காண்கிறோம். கல்வியறிவற்ற ஏழைத் தமிழ்மக்கள் வயல்வேலை செய்யும் போதும் வண்டியிழுக்கும் போதும் வண்டி ஒட்டும் போதும் ஏற்றம் இறைக்கும் போதும் நெல் அவல் முதலியவற்றைக் குற்றும் போதும் இன்றளவும் பாடிவருகின்றனர். இவை கிராமியப் பாடல்கள் என்று இன்று கூறப்படுகின்றன. இவை மிக்க சுவையுடையவை; உழைக்கும் மக்களுடைய உள்ளங்களை ஈர்க்கத் தக்கவை.

இவைதாம் முதலில் தோன்றிய இலக்கியம்

மனிதன் ஆற்றங்கரை நகரத்தில் அமர்ந்து நிலைத்த பிறகுதான் உழவும் கைத்தொழிலும் வளம் பெற்றன. அப்பொழுது அறிவும் வளம் பெற்றது. சமுதாயம் தன் மொழிக்குரிய எழுத்துக்களை அமைத்துக் கொண்டது. அது காறும் வாயளவில் இருந்த பாக்கள் எழுத்துருவைப் பெற்றன. கருத்துக்களுக்கு ஏற்பச் செய்யுட்களின் அடிகளும் சுருக்கமாகவும் நீளமாகவும் அமைந்தன.

நிலையான அரசு ஏற்படுவதற்கு முன்பு மக்கள் அறிவு குடும்ப அளவிலேயே நிலைத்திருந்தது. அவர்கள் குடும்பத்தையே உலகமாகக் கருதினார்கள். மனத்திற்குரிய மங்கை நல்லாளை இளைஞன் ஒருவன் காணுதலும் காதல் கொள்ளுதலும் திருமணத்திற்கு முன் அக்காதல் வாழ்வை நீட்டித்தலும் அப்பொழுது நடைபெறும் நிகழ்ச்சிகளும் திருமணத்திற்குப் பின் நடைபெறும் நிகழ்ச்சிகளுமாகிய இவையே பழந்தமிழ் மக்களின் கருத்தைக் கவர்ந்தன. அதாவது, குடும்பத்திற்கு அப்பால் அவர்கள் அறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/44&oldid=1459163" இலிருந்து மீள்விக்கப்பட்டது