பக்கம்:தமிழ் அமுதம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

காஞ்சிமாநகரில் கண்ணகிக்கு ஒரு கோவிலைக் கட்டினான் ; கோவில் பூசைக்குரிய எல்லா வசதிகளையும் செய்தான் ; அந்த விழாவில் செங்குட்டுவன் நண்பரான இலங்கைக் கயவாகு வேந்தனும் மாளுவ மன்னனும் பிறரும் கலந்துகொண்டனர் : அம்மன்னர்கள் தத்தம் நாடுகளில் கண்ணகிக்குக் கோவில்கள் எடுப்பித்தனர்; செங்குட்டுவன் விழா நடத்திய போழ்து கண்ணகித் தெய்வம் விண்ணிடைத் தோன்றி வரம் அளித்தது ; இக்காட்சியைக் கண்ட இளங்கோவடிகள் கண்ணகியின் வரலாற்றை ஒரு பெரிய காவியமாகப் பாடினார் ; அதன் பெயரே சிலப்பதிகாரம் என்பது; இச்செய்திகளெல்லாம் சிலப்பதிகாரத்தின் மூன்றாம் பகுதியாகிய வஞ்சிக்காண்டத்தில் காணலாம்.

சிலப்பதிகாரம்: கண்ணகி காவிரிப்பூம் பட்டினத்தில் பிறந்து வளர்ந்தாள் ; கணவனோடு வாழ்ந்தாள் ; பின்பு பாண்டிய நாட்டுத் தலைநகரான மதுரை சென்றாள்; அங்குக் கணவனை இழந்தாள்; பின்பு சேரநாடு சென்று வானுலகம் அடைந்தாள்; எனவே, கண்ணகி வரலாறு சேர, சோழ, பாண்டிய நாடுகளுடன் தொடர்பு உடையதாயிற்று. மூன்று தலைநகரங்களும் தொடர்பு கொள்வதாயிற்று; இவ்வரலாற்றில் முத்தமிழ் வேந்தரும் குறிக்கப்பட்டுள்ளனர்; சோழன் மாதவியின் அரங்கேற்றத்தில் கலந்து கொண்டவன். அவருள் பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைக் கொல்வித்தவன்; சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எடுப்பித்தவன். இவ்வரலாறு, (1) அரசியல் தவறியவர்க்கு அறமே எமனாகவந்துமுடியும், (2) சிறந்த பத்திளியைப் பெருமக்கள் போற்றுவார்கள் (3) ஊழ்வினை தன்பயனை உண்டாக்கவல்லது — என்னும் மூன்று படிப்பினைகளைக் தன்னகத்தே கொண்டுள்ளது ; இவற்றை மக்களுக்கு அறிவுறுத்தவே தாம் சிலப்பதிகாரம் செய்ததாக இளங்கோவடிகள் கூறியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/51&oldid=1459170" இலிருந்து மீள்விக்கப்பட்டது