பக்கம்:தமிழ் அமுதம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

இக்காவியத்தில் குறிஞ்சி நிலச் செய்திகளைக் காட்சிக் காதையால் அறியலாம் ; பாலை நிலச் செய்திகளை வேட்டுவ வரியால் தெரியலாம்; முல்லை நிலச் செய்திகளை ஆய்ச்சியர் குரவையால் அறியலாம்; மருத நிலச் செய்திகளை நாடுகாண் காதையாலும் பிற காதைகளாலும் அறியலாம்; நெய்தல் நிலச் செய்திகளைக் காவிரிப்பூம்பட்டினத் துறைமுக வருணனையால் அறியலாம்; தமிழகத்துத் தலைநகரங்களான காவிரிப்பூம்பட்டினம், மதுரை, வஞ்சிமாநகர் ஆகியவை பற்றிய விவரங்களை — தெருக்களின் அமைப்பு, கடைத்தெருவின் சிறப்பு, பல வகைக் கோவில்களைப் பற்றிய விவரங்கள், நகர மக்களுடைய பழக்க வழக்கங்கள் ஆகிய விவரங்களை — அறியலாம் ; அக்கால உள்நாட்டு வாணிகம், கடல் வாணிகம், திருமண முறை, நடனக்கலை, போர்முறை, தமிழரசர் வீரம், சைவம், வைணவம், சமணம் ஆகிய சமயங்கள் முதலியவை பற்றிய விவரங்களையெல்லாம் இக் காவியத்தில் காணலாம் : இப்பெருங் காவியம் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் தன்னகத்தே கொண்டது; மூன்று அரசர்களைப் பற்றிய சிறப்புக்களைக் கூறுவது; தமிழரசர்தம் தமிழ்ப் பற்றையும் தமிழ் வீரத்தையும் விளக்குவது; கரிகாலன் வடநாட்டில் வெற்றி பெற்ற விவரங்கள், செங்குட்டுவன் உத்தர கோசலத்தில் (கங்கைக்கு வடக்கே) ஆரிய மன்னரை வென்றமை, நெடுஞ்செழியன் 'ஆரியப் படைகடந்த' என்ற அடை மொழி பெற்றமை இவைபோன்ற தமிழரசர் வீரச் செயல்களைத் தெரிவிப்பது.

இளங்கோவடிகள் மிகச் சிறந்த குணமும் விருப்பு வெறுப்பற்ற மனப்பான்மையும் உடையவர் என்பது, அவர் முத்தமிழ் வேந்தரை ஒன்றுபோலவே பாடியிருத்தலைக்கொண்டு அறியலாம். கோவலனும் கண்ணகியும்

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/52&oldid=1459171" இலிருந்து மீள்விக்கப்பட்டது