பக்கம்:தமிழ் அமுதம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

களைக் கேட்டறிந்தாள் ; இறுதியில் பெளத்த சமயமே சிறந்தது எனத் துணிந்தாள் அறவண அடிகள் என்ற பெளத்த முனிவரிடம் அறிவுரை பெற்று யோகத்தில் அமர்ந்தாள். இந்த விவரங்களைக் கூறுவதே மணிமேகலை என்னும் பெருங் காவியம்.

அக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுக் கொருமுறை இந்திரவிழா நடைபெற்று வந்தது. அதைப் பற்றிய விவரங்களை யெல்லாம் மணிமேகலையில் காணலாம். காஞ்சி, வஞ்சி, காவிரிப்பூம்பட்டினம் இவை. பற்றிய விவரங்களை இக் காவியத்தில் காணலாம். அக்காலத் தமிழர் கடல்கடந்து வாணிகம் செய்த விவரங்களையும், அவர்கள் பல மொழிகளிலும் பேச அறிந்திருந்தனர் என்பதையும், கற்புடை மகளிர் சிறப்புக்களையும், பெளத்த சமயக் கொள்கைகளையும், பல சமயக் கொள்கைகளையும், மாலை வருணனை, நகர வருணனை போன்ற வருணனைகளையும் இந் நூலில் படித்துணரலாம். சோழனது அரண்மனைத் தோட்டத்திலிருந்த மண்டபத்தைப் பற்றிய வருணனை வியக்கத்தக்கது. பலநாட்டுத் தொழிலாளரும் தமிழ்த் தொழிலாளரும் சேர்ந்து அமைத்த மண்டபம் அது. இதனால் தமிழரசர் பலநாட்டுத் தொழிலாளரையும் வருவித்துச் சிறந்த முறையில் மண்டபங்களையும் கட்டடங்களையும் அமைத்துக்கொண்டனர் என்பது தெரிகிறது. சாத்தனார் பெளத்தர் ; அவர் செய்த மணிமேகலையில் பெளத்த சமயப் பிரச்சாரமே மிகுந்திருக்கிறது. சிலப்பதிகாரத்தைப் போலவே மணிமேகலையும் ஆசிரியப் பாவில் இயன்றது. இவை இரண்டும் இரட்டைக் காப்பியங்கள் என்று சொல்லப்படும். இவை ஒரே குடும்பத்தைப் பற்றிய இரண்டு காவியங்கள் அல்லவா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/55&oldid=1459174" இலிருந்து மீள்விக்கப்பட்டது