பக்கம்:தமிழ் அமுதம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

சிவப் சுவாமிகள் பிரபந்தங்கள், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நூல்கள் என்பவை குறிப்பிடத் தக்கவை. இராம நாடகம், குறவஞ்சி நாடகம், பள்ளு முதலிய நாடக நூல்கள் சிலவும் இக்காலத்தில் தோன்றின. தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்மீது பாடப்பட்ட குறவஞ்சி நாடகமும், குற்றலக் குறவஞ்சியும் குறிப்பிடத்தக்கவை. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை செய்த 'மனோன்மணீயம்' என்னும் நாடக நூல் போற்றத்தக்கது.

இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலக் கல்வியின் ஊக்கத்தால் தமிழில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. தமிழில் உரைநடை நூல்கள் பெருகின. சங்கநூற் செய்திகளும் இடைக்கால நூற் செய்திகளும் பிறவும் உரைநடை நூல்களாக வெளிவந்தன. கல்விச் சாலைகள் ஏற்பட்டமையால் பாடநூல்கள் மிகுதிப்பட்டன. உலக அறிவை ஊட்டக்கூடிய பல நூல்கள் தமிழில் தோன்றின. சமுதாய சீர்திருத்தத்தை வற்புறுத்தும் செய்யுள் நூல்களும் உரைநடை நூல்களும் எழுந்தன. மேனாட்டுச் சிறு கதைகளையும் பெருங்கதைகளையும் (நாவல்களையும்) தழுவித் தமிழில் சிறுகதை நூல்களும் பெருங்கதை நூல்களும் பெருகின : இன்றும் பெருகிக்கொண்டே வருகின்றன. நாடகக்கலை நன்கு வளர்ச்சிபெற்று வருகிறது. அதனால் எண்ணிறந்த நாடக நூல்கள் தமிழில் எழுதப் பட்டு வருகின்றன. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் போன்ற கவிஞர்கள் சமுதாய சீர்திருத்தம் பற்றியும் பிற பொருள்பற்றியும் எளிய இனிய செய்யுட்களைப் பாடியுள்ளனர். நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்கள் இன்று சிறந்த செய்யுட்களை இயற்றி வருகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/65&oldid=1459184" இலிருந்து மீள்விக்கப்பட்டது