பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36. காஞ்சிபுரத்தில் காளமேகம்

கண்ணும் செவியும் கால்களும் பெற்று கண்டும் கேட்டும் நடந்தும் வாழ்க்கையை அனுபவிக்கும் போது வசதிகளைப் பெற்றவர்கள் உலகெங்கும் இருந்தாலும் அவர்களில் சிலரினும் சிலருடைய அனுபவங்களே காவியமாகும் தகுதியினைப் பெறுகின்றன. பிரதி தினமும் பிரகிருதியின் சின்ன பின்னங்களில் மனித அனுபவத்திற்கும் சுவாதீனத்திற்கும் உட்பட்ட ஒவ்வோர் அணுவிலும் காவியத்தின் மூலப் பொருளாகிய இரஸக் கனிவு இருக்கத்தான் இருக்கின்றது. அதனை அனுபவித்து வெளியிடும் சக்திதான் காவியம். பல்லாயிரம் பாடல்களும் அது சொல்லும் பெரிய கதையும் சேர்ந்தே காவியம் என்று மட்டும் எண்ணுவது பொருந்தாது. காவியம் என்ற சொல் 'கவியாற் செய்யப்படுவது’ என்னும் பொருளை உடையது. எனவே அனுபவங்களை நகைச்சுவை தோன்றும் படியாகச் சொல்லும் காளமேகத்தின் தனிப்பாடல்களிலிருந்து அனுபவங்களைத் தெய்வீக அழகு தோன்ற வெளியிடும் கம்பர் காவியம் வரை யாவும் காவியங்களே. வெளியிடுகின்ற அனுபவம் 'தன்னைப் பொறுத்ததா? பிறரைப் பொறுத்ததா?’ என்ற ஆராய்ச்சி இங்கே அவசியமில்லாதது.

காளமேகத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியும் ஒரு தனி நகைச்சுவைச் சித்திரம். உலகத்தை அவர் எந்தக் கோணத்தில் நின்று, எந்த மன நிலையோடு அனுபவித்திருக்கிறார் என்ற வினாவிற்கு அவருடைய பாடல்கள் விடை பகர்ந்துவிடும். அவருடைய பாடல்களிலிருந்து வேடிக்கையும் விநோதமும் பற்றில்லாத மன இயல்பும் சாதாரண உலகத்தை நகைத்து கிண்டிப் பார்க்கும் தன்மையையும் உடையவர் என்று நாம் அவரை அறிந்து கொள்ள முடிகின்றது. சுருங்கச்சொன்னால் அவர் காலத்துத் தமிழ்நாட்டிற்கு அவர் ஒரு பெர்னாட்ஷாவாக விளங்கி வந்திருக்கிறார். அவர் பாடல்களில் சொந்த அனுபவங்களை அவரே வெளியிடும் நிலையை ஊன்றி ஆராய்ந்தால் இந்த உண்மை புலப்படும். தமிழில் தனிப்பட்ட நகைச்சுவைப் பாடல்கள் என்று பிரித்தெடுத்தால் காளமேகத்தின்