பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

99

பாடல்களே பெரியஅளவிற் கிடைக்கும். ‘விட்டேற்றியாக மனம் போன போக்கில் சுற்றித் திரிந்தபோது பாடிய வெறும் பாடல்கள் தாமே?’ என்று காளமேகத்தின் கவிதைகளை வெறுப்பவர், அவரையும் அவருடைய பாடல்களையும் சரியாக உணரத் தெரியாதவர்கள் என்றே சொல்ல வேண்டும். காஞ்சிபுரம் சென்றிருந்தபோது காஞ்சி பூரீ வரதராஜப் பெருமாளின் கருட வாகனத்தைத் தரிசித்துக் காளமேகம் பாடிய நகைச்சுவைப் பாடல் ஒன்றுண்டு. கவிச் சுவையும் உயர்தர நகைச்சுவையும் பொருந்திய அந்தப் பாடலைப் படித்தால் அவரை ‘விட்டேற்றி’ என்று சொல்லுபவர்கள் தங்கள் அபிப்பிராயம் தவறு என்று உணர முடியும். முடிந்தால் அது இந்தப் பாட்டின் வெற்றிதான்.

காளமேகம் வந்திருந்த அன்றைக்கு காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாளுக்குக் கருட வாகனத் திருநாள். ஜகஜ் ஜோதியாகப் பிரகாசிக்கும் தங்கக் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளும்போது தற்செயலாகக் காளமேகத்திற்கும் அந்த தரிசனம் கிடைத்தது.பெருமாளைத் தரிசித்த காளமேகம் தரிசனப் பலனாகவோ என்னவோ தரிசனத்தோடு கூடிய கற்பனை ஒன்றையும் பெற்றார். ஆயிரக்கணக்கில் கூடியிருந்த அத்தனை மக்களும் அந்தத் தரிசன அனுபவத்தைப் பெற்றவர்கள் தாம். ஆனாலும் காளமேகம் ஒருவருக்கு மட்டும் தானே பெருமாளைப் பழிப்பது போலப் புகழும் அந்தப் பாடலைப் பாடுதற்குரிய கற்பனை ஏற்பட்டது? ‘கோவிலுக்குள்ளே இருந்த பெருமாள், கோவிலுக்குள்ளேயே சும்மா இருந்திருந்தால் இந்த வம்பெல்லாம் வந்திருக்காது. வெளியில் வரப்போக, ‘பருந்து’ தூக்கிக்கொண்டு போய் விட்டதே! ஐயையோ! வேண்டும் இந்தப் பெருமாளுக்கு நன்றாக இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். இவர் ஏன் இருந்த இடத்தில் இருக்காமல் வெளியே வந்தார்? இப்படி ஒரு குழந்தை வேடிக்கையாக நினைப்பது போல நினைத்தார் காளமேகம். நினைவை ஒரு வெண்பாவாகப் பாடினார். பாடல் வெளிப்படையாக இகழ்ச்சியோடு பாடிய வெறும் நகைச்சுவைப் பாடலாகத் தோன்றினாலும், புகழ்ச்சியும் ஒரு குழந்தை விளையாட்டாக எண்ணிப் பார்ப்பது போன்ற இயல்பும் அதில் துணுக்கமாக அமைக்கப்பட்டுள்ளன.