பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

101

தன்னையே அடிக்கக் கண்டு வருந்தும் நிலையை ஒத்திருந்தது. அறியாமல் கொள்ளாமல்,'அவரை ஒன்றுந் தெரியாதவர் என்று நிரூபித்து விட வேண்டும்’ என நினைத்து அவரிடம் வாயைக் கொடுத்தவர்கள் இவரிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என்று எண்ணும் படியாகச் செய்து விடுவார். வேடிக்கைக்கு வேடிக்கை பேசும் அவர் வாய், வினைக்கு வினை பேசும்!

“தம்மைப் பற்றி மற்ற புலவர்கள் என்ன எண்ணிக் கொள்கிறார்களோ?’ என்ற கவலையை அவர் கொள்ளுவது இல்லை. இருந்தாலும் கொல்லர் தெருவில் ஊசி விற்பதைப் போலத் தம்மிடமே வாதுக்கு வருபவர்கள் மேல் அவருக்கு அசாத்தியமான சீற்றம் வந்துவிடும். தம்மை ‘வெள்ளைக் கவி’ என்று பலவீனப்படுத்தி நிரூபணம் செய்ய வரும் பொறாமைக் காரர்களுக்கே அந்தப் பட்டத்தைக் கட்டிப் பலவீனத்தோடு அவர்கள் தலைகுனிந்து போகச் செய்வதற்கு அவர் ஒருபோதும் தயங்கினதே இல்லை. அத்தகைய சந்தர்ப்பங்கள் அவருடைய கவிதை வாழ்க்கையில் எத்தனையோ முறைகள் வாய்த்திருக் கின்றன. அவற்றில் வியப்புக்குரிய ஒன்று என்னவென்றால் ஒரு முறையாவது தோல்வியின் அறிகுறி கூடக் காளமேகத்தின் பக்கம் வாய்த்ததில்லை.

அவற்றுள் சான்றாக ஒரு நிகழ்ச்சியை இங்கே காண்போம். காளமேகத்தின் திறமையிலும் புகழிலும் பெருமையிலும் பொறாமை கொண்ட சிலர் அவரை எப்படியாவது மட்டத் தட்டிக் காட்டிவிட வேண்டுமென்று கூடிச் சிந்தித்தனர். கடைசியில் ஒரு தீர்மானத்திற்கும் வந்தனர். “காளமேகத்தினிடம், வெண்பாவிற்குரிய - பூரணப்பொருள் சாராத -முறிப்படியாகிய இறுதி அடி ஒன்றைக் கொடுத்து அதை வைத்துக் கொண்டு பாட்டைப் பூர்த்தி செய்யுமாறு சொல்ல வேண்டும். நாம் கொடுக்கின்ற இறுதி அடி விபரீதமாக அரைகுறை நிலையில் இருக்கும். ஆகையால் அவர் அதைப் பூர்த்தி செய்ய இயலாமல் தோற்றுப் போவார்” என்பதே அவர்கள் தீர்மானம். இப்படித் தீர்மானித்த பின் அவர்களே மீண்டும் கூடி குடத்திலே கங்கையடங்கும்’ என்ற இறுதியடியைக் காளமேகத்தினிடம்