பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

தமிழ் இலக்கியக் கதைகள்

இப்புறம் நகர்வது கூட இயலாததாகி விட்டது. அப்போதும் புலவர் தாமாக எதுவும் சொல்லவில்லை. கருப்பண்ண வள்ளல் அவர் நிலையைக் கண்டு நடுநடுங்கி மனம் பதைத்து விசாரித்த போது தான் முள் தைத்ததைப் பற்றி வள்ளலிடம் கூறினார் அவர்.

“தைத்தவுடனே கூறியிருந்தால் இவ்வளவு தூரத்திற்கு வந்திருக்காதே? வீண் சிரமத்திற்கு இடம் கொடுத்துக் கொண்டு விட்டீர்களே?” என்று அன்புடன் அவரைக் கடிந்து சினந்து கொண்டே வைத்தியருக்கு ஆள் அனுப்பினார் கருப்பண்ண வள்ளல். அவருடைய தம்பியர்களும் புலவருக்கு வந்த துன்பத்திற்கு மனமிரங்கிக் கவலை தோய்ந்த முகத்துடனே அருகில் நின்று கொண்டிருந்தனர்.

வைத்தியரை அழைத்து வரச் சென்ற ஆள் அவரை அழைத்து வருவதற்கு முன்பே, புலவரைத் தேடி அவர் சொந்த ஊரிலிருந்து ஒர் அள் வந்து சேர்ந்தான். பரபரபப்பாக வந்த அந்த ஆள் ஊரில் புலவர் மனைவி நோயுற்றிருப்பதாகவும் சென்ற இரண்டு நாட்களாக நோய் முற்றி உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாகி இருப்பதாகவும் அவரை உடனே காண விரும்பி அழைத்து வரச் சொல்லியதாகவும் கூறினான். புலவர் வேதனையடைந்து ஊர் செல்லுவதற்குத் துடித்தார். காலில் முள் தைத்திருப்பதினால் ஏற்பட்ட தம் அவஸ்தை கூட அவருக்கு அப்போது நினைவில்லை. அவருடைய சொந்த ஊர் அங்கிருந்து மிகுந்த தொலைவில் இல்லை நான்கு நாழிகைப் பயணம் தான்.

‘வீணாக இப்போது வைத்தியரை அழைத்து வரவேண்டாம்! எப்படியாவது ஒரு பல்லக்கில் வைத்தாவது என்னை ஊரில் கொண்டு போய் விடச் செய்யுங்கள் அதுதான் நீங்கள் இப்போது எனக்குச் செய்ய வேண்டிய பேருதவி, இந்த நிலையில் நான் அவளைக் காணாமல் இருக்கமுடியாது. என் காலை நான் ஊருக்குச் சென்று அங்கே வைத்தியரிடம் காண்பித்துக் கொள்கிறேன். அவளே இப்படிக் கிடக்கும் போது என் காலுக்கு வைத்தியம் செய்ய இப்போது என்ன அவசரம் வேண்டிக் கிடக்கிறது?’ என்று மனம் நொந்து இரக்கமும் உருக்கமும் தேங்கிய குரலில் கூறினார் புலவர்.