பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
107
 

தாங்கள் தெய்வாம்சமாகக் கருதி வணங்கிவரும் பெரிய சீமானும் குணவானுமாகிய கருப்பண்ண வள்ளல் தெரு வழியே இடுப்புத் துணியோடு முண்டமாகப் பல்லக்குச் சுமந்து செல்வதை மாவூரார் அன்று, அப்போது கண்டனர். அவர்கள் சிலர் கண்ணீர் சிந்தினர், சிலர் நெஞ்சுருக வைத்த கண் வாங்காமல் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே நின்றனர். கருப்பண்ண வள்ளலும் அவர் தம்பியருமோ புன்முறுவல் பூத்து மலர்ந்த முகத்துடனே தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் பக்தர்களைப் போலப் பல்லக்கைச் சுமந்தவாறே மேற்சென்று கொண்டிருந்தனர்.

வீதிகளைக் கடந்து பல்லக்கு ஊர் எல்லையை அடைந்தது. அங்கே அருகில் வயல்களிலே வேலை செய்து கொண்டிருந்த வேளாளர்கள் இந்தக் காட்சியைக் கண்டு திடுக்கிட்டு ஓடோடியும் வந்து பல்லக்கைச் சூழ்ந்து கொண்டார்கள். "என்ன காரியம் செய்து விட்டீர்கள் பிரபு? ஒரு வார்த்தை சொல்லி அனுப்பி இருந்தால் நாங்கள் வந்திருக்க மாட்டோமா, இதைச் செய்ய?" என்று கெஞ்சினார்கள். - -

வெளியே ஆரவாரம் கேட்டுப் பல்லக்கினுள்ளே இருந்த புலவர் திரையை விலக்கி எட்டிப் பார்த்தார். திடுக்கிட்டார். வள்ளலும் அவர் தம்பியும் பல்லக்கைச் சுமந்து நின்றதைக் கண்டு அவர் பல்லக்கிலிருந்து கீழே குதித்து விட்டார். அப்படிக் குதித்த போது வீங்கிச் சீழ் கொண்டிருந்த அவர் கால் கூட வலிக்கவில்லை. அதைவிட மனம்தான் வலித்தது. ஒரு பெரிய சீமான் தம் தம்பிகளோடு தனக்காக் எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறார்!’ என்று எண்ணி உருகியது உள்ளம். புலமை உள்ளம் வலித்தால் என்ன? மகிழ்ந்தால் என்ன? வாடினால்தான் என்ன? அந்த உள்ளத்தின் எல்லா அனுபவங்களும் பாட்டாகத்தானே வடிவம் பெறும்:

“எல்லப்பன் அம்மையப்பன் தரு

திருவேங்கடராமன் எழிற் சீராம

வல்லக் கொண்டமனுடனே

மாதை வேங்கடேசனைப் போல்வரிசை தந்தான்