பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
9
 

காளமேகத்திற்குக் கொட்டாவி மேல் கொட்டாவியாக வந்தது. உள்ளிருந்து கொழியரிசி குத்தும் உலக்கை ஒலி கேட்டது. தூக்கம் மீண்டும் கண்ணைச் சொருகியது. சத்திரத்து வாசற்படியில் உட்கார்ந்தவாறே தூங்கிவிட்டார். இரண்டாம் முறையாக அவர் கண் விழித்தபோது ஊர் அரவம் அடங்கிப் போயிருந்தது. ஏறக்குறைய நள்ளிரவு என்று சொல்லும் அளவுக்கு இரவு வளர்ந்திருந்து. உள்ளேபோய்ப் பார்த்தார். அரிசியை அள்ளி உலையிலிட்டுக் கொண்டிருந்தான் சமையற்காரன், மறுபடியும் ஏமாற்றத்துடன் வாசலுக்குத் திரும்பி வந்தார்.

“ஏய்! யாரது வாசற்படியிலே கிடந்து உறங்குவது? எழுந்திருந்து வழியை விடு ஐயா!” அதட்டலைக் கேட்டுக் கண்விழித்தார் காளமேகப் புலவர், இருள் மெல்ல விலகத் தொடங்கியிருந்தது. கிழக்கே வெள்ளி முளைக்கும் நேரம். பொழுது விடிய இன்னும் சில நாழிகைகளே இருந்தன. உள்ளே விருந்து அழைப்பு என்ற பேரில் "சாப்பிடுகிறவர்கள் உடனே வரலாம். இலையில் சோறு இட்டாய் விட்டது” என்ற குரல் வந்தது. காளமேகமும் உள்ளே சென்றார். முதல் நாள் பன்னிரண்டு நாழிகைக்குப் பசியோடு வந்தவர், மறுநாள் விடிவெள்ளி எழுகின்ற போதிலே இரண்டு வாய்சோற்றை அள்ளி உண்டார். உடம்பிலே கொஞ்சம் தெம்பு பிறந்தது. தெம்பில் ஒரு பாட்டு உருவாயிற்று. எச்சில் கையும் தானுமாக இலைக்கு முன்னால் அமர்ந்து பாட ஆரம்பித்துவிட்டார் காளமேகப் புலவர், குறும்புச் சிரிப்பு அவர் முகத்தில் நெளிந்தது.

"கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்"

சத்திரத்துக்காரர் முகத்தில் விளக்கெண்ணெய் வழிந்தது.